சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC), சர்வதேச கிரிக்கெட் காலண்டரில் பல முக்கிய மாற்றங்களை மேற்கொள்வது தொடர்பில் ஆலோசித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, ஆண்கள் ஒருநாள் உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை குறைத்தல், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அரையிறுதிப் போட்டிகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் உலகளாவிய கிளப் டி20 தொடரை ஆரம்பித்தல் உள்ளிட்ட முன்மொழிவுகள் பரிசீலனையில் உள்ளன.
எதிர்கால ஒளிபரப்பு உரிம பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, சர்வதேச கிரிக்கெட்டின் வணிக மதிப்பை அதிகரிக்கும் நோக்கில், எடின்பர்க்கில் நடைபெற்ற ஐ.சி.சி. மாநாட்டில் இந்த யோசனைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்கள் 50 ஓவர் உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை 14 இலிருந்து 12 ஆகக் குறைப்பது தொடர்பாகவும், 2027ஆம் ஆண்டு உலகக் கோப்பை முதல் புதிய மாற்றங்களை கொண்டுவருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மேலும், தற்போதுள்ள ‘சூப்பர் சிக்ஸ்’ முறைக்கு பதிலாக ‘சூப்பர் 7’ முறையை அறிமுகப்படுத்தும் யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அரையிறுதிப் போட்டிகளை இணைப்பதன் மூலம், இறுதிக்கட்டம் வரை அதிக அணிகள் போட்டியில் நீடிக்கும் வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், உலகின் முன்னணி உள்ளூர் பிரான்சைஸ் அணிகளை இணைத்து உலகளாவிய கிளப் டி20 தொடரை நடத்தும் யோசனையும் பரிசீலனையில் உள்ளது.
எனினும், இந்த முன்மொழிவுகள் இதுவரை ஐ.சி.சி.யினால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை என்றும், மேலதிக ஆலோசனைகளின் பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.