இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ‘Quick Commerce(க்விக் காமர்ஸ்)’ எனப்படும் விரைவான பொருள் விநியோகத் துறையில், 2030ஆம் ஆண்டுக்குள் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய அமேசான்(Amazon) திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் திட்டம் தொடர்பில் நேரடியாக அறிந்த இரண்டு தரப்பினர் Reuters செய்தி நிறுவனத்திடம் தெரிவித்த தகவலின்படி, இந்தியாவின் விரைவான டெலிவரி சந்தையில் அமேசான்(Amazon) மேற்கொள்ளவுள்ள மிகப்பெரிய முதலீடாக இது அமையவுள்ளது.
அமேசான்(Amazon), 2027ஆம் ஆண்டின் இறுதிக்குள் சுமார் 1 பில்லியன் டொலர்களையும், அதன் பின்னர் 2030ஆம் ஆண்டுக்குள் மேலும் 2 பில்லியன் டொலர்களையும் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முதலீட்டின் முக்கிய நோக்கமாக, அமேசான் நவ்
(Amazon Now) சேவைக்காக புதிய சிறிய அளவிலான உள்ளூர் கிடங்குகளை அமைத்தல், பொருட்களின் இருப்பை நிர்வகிக்கும் மென்பொருளை மேம்படுத்துதல், தேவையை முன்கூட்டியே கணிக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல் மற்றும் பொருட்களின் வகைகளை அதிகரித்தல் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்தியாவின் நகர்ப்புறங்களில் Quick Commerce(க்விக் காமர்ஸ்) சேவைகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. பால், மளிகைப் பொருட்கள் மற்றும் சாக்லேட் போன்ற அன்றாடப் பொருட்கள் முதல் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் மின்னணு சாதனங்கள் வரை சில நிமிடங்களில் பொருட்களை வீடுகளுக்கு விநியோகிக்கும் சேவைகள் நுகர்வோர் வாங்கும் முறையையே மாற்றியுள்ளன. இந்திய Quick Commerce(க்விக் காமர்ஸ்) சந்தை தற்போது சுமார் 19 பில்லியன் டொலர் மதிப்புடையதாகவும், 2030ஆம் ஆண்டுக்குள் அது 41 பில்லியன் டொலராக அதிகரிக்கக்கூடும் என்றும் தரவு நுண்ணறிவு (Datum Intelligence) மதிப்பிட்டுள்ளது.
எனினும், இந்தத் துறையில் அமேசான்(Amazon)க்கு கடும் போட்டி நிலவுகிறது. பிளின்கிட்(Blinkit), ஸ்விக்கி(Swiggy) மற்றும் ஜெப்டோ(Zepto) ஆகிய இந்திய நிறுவனங்கள் இணைந்து சந்தையில் சுமார் 77 சதவீத பங்கை கொண்டுள்ளன. வால்மார்ட்(Walmart)-க்கு சொந்தமான ஃபிலிப்கார்ட்(Flipkart)-க்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் சுமார் 11 சதவீத சந்தைப் பங்கு உள்ள நிலையில், Amazon தற்போது சுமார் 6.2 சதவீத சந்தைப் பங்கையே கொண்டுள்ளதாக Datum Intelligence தரவுகள் தெரிவிக்கின்றன. Amazon Now சேவைக்கான சிறிய உள்ளூர் கிடங்குகளின் எண்ணிக்கையை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் சுமார் 750 இலிருந்து 1,300 ஆக அதிகரிக்க நிறுவனம் இலக்கு வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Amazon தனது Quick Commerce சேவையில் முதற்கட்டமாக அன்றாடத் தேவைகளுக்கான பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கத் திட்டமிட்டுள்ளது. அதிக செலவைக் கொண்ட இந்த விநியோக மாதிரியில் மளிகைப் பொருட்கள் மட்டும் போதுமான வருமானத்தை வழங்காது என சில ஆய்வாளர்கள் எச்சரித்துள்ள போதிலும், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் இந்த சந்தையில் தனது நிலையை வலுப்படுத்துவதற்கான முக்கிய முதலீடாக Amazon இந்தத் திட்டத்தை முன்னெடுக்கிறது. இதனிடையே, கடந்த மூன்று மாதங்களில் Amazon India-வின் Quick Commerce வர்த்தகத்தின் வருடாந்திரமயமாக்கப்பட்ட மொத்த விற்பனை 1 பில்லியன் டொலரை கடந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.










