மட்டக்களப்பில் இளையோருக்கான கடின பந்து கிரிகட் சமர் ஆரம்பம்
மட்டக்களப்பில் இளம் கிரிக்கெட் வீரர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கில் வளர்ந்துவரும் இளையோர் விளையாட்டு வேலைத்திட்டத்தினூடாக கடினபந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் பாஸ்கரனின் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை கோட்டமுனை விளையாட்டு கிராம புட்தரை மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பிலுள்ள இளம் கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இத்திட்டத்தினூடாக கடந்த 2019 ஆம் ஆண்டு 13 வயதிற்குட்பட்ட இளம் கிரிக்கெட் வீரர்களுக்கான போட்டிகள் மாவட்ட மட்டத்தில் நடாத்தப்பட்டது.
இத் தொடரில் சிவானந்தா தேசிய பாடசாலை, புனித மிக்கல் கல்லூரி, மெதடிஸ்த மத்திய கல்லூரி மற்றும் ஈ.பீ.பீ. அக்கடமி ஆகிய அணிகள் பங்குபற்றி இருந்தன. இதில் சிவானந்தா தேசிய பாடசாலை சம்பியனாகத் தெரிவாகியிருந்தது.
- Advertisement -
இம்முறை இளையோர் விளையாட்டு வேலைத்திட்டத்தினூடாக நடாத்தப்படும் இப்போட்டித் தொடர் 15 வயதிற்குட்ட கடினபந்து கிரிக்கெட் போட்டிகளுக்கிடையே இடம்பெறுவதுடன், கடந்த 2019ல் கலந்து கொண்ட அணிகளை வலுப்படுத்தும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
மேலும் இத்தொடரில் மட்டக்களப்பு ஈ.பீ.பீ. அக்கடமி, மட்டக்களப்பு ஈஸ்டன் ஸ்டார் கிரிக்கெட் அக்கடமி, மாவனல்ல கிரிக்கெட் அக்கடமி, காலி மாதம்ப கிரிக்கெட் அக்கடமி அணிகள் பங்குபற்றவுள்ளன.
இன்றைய ஆரம்பநாள் நிகழ்வின்போது கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் தலைவர் சடாற்சரராஜா, கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான சிவநாதன், கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் தலைவர் சஜிதராஜ் உள்ளிட்ட அதிதிகள், இளம் விளையட்டு வீரர்கள் பார்வையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
தொடராக 3 தினங்கள் இடம்பெறும் இப்போட்டித் தொடரின் இறுதிநாள் நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
- Advertisement -