-அம்பாறை நிருபர்-
உலக வாய் சுகாதார தினத்தையொட்டி முன்பள்ளி மாணவர்களின் வாய் சுகாதாரம் தொடர்பாக பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட, கண்காட்சியும் விழிப்புணர்வு நிகழ்வும் அட்டாளைச்சேனை றவ்ழத்துல் அத்பால் பாலர் பாடசாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில், ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வானது, அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எல்.அலாவுடீன் தலைமையில் இடம்பெற்றது.
‘வாயின் மகிழ்ச்சி வாழ்வின் மகிழ்ச்சி எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற நிகழ்வில் கல்முனை பிராந்திய வாய் சுகாதாரப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் யூ.ஹபீப் முஹம்மட் பிரதம அதிதியாகவும், நடமாடும் பல் வைத்திய நிபுணர் வைத்தியர் எம்.எம்.பைறுஸ் விசேட அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.

ஹன்ழலத் பின் ஆமிர் ஜூம்ஆ பள்ளி தலைவர் மௌலவி எம்.ஏ.முபீன், அந்-நூர் மகா வித்தியாலய அதிபர் என்.கே.எம்.மிஸ்வர், மேற்பார்வை பாடசாலை பல் சிகிச்சையாளர் கே.ஜனலோஜினி, சுகாதார கல்வி உத்தியோகத்தர் எம்.ஜே.எம்.பைறூஸ், பொதுச்சுகாதார பரிசோதகர் ஏ.எச்.பஹ்மி, பொதுச் சுகாதார மருத்துவ மாது திருமதி ஐ.றஹ்மத்தும்மா, பாடசாலை பல் சிகிச்சையாளர் திருமதி ஹசீனா சாதிக், எஸ்.எல்.மக்சூத் (PDO) உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பின்வரும் முக்கிய விடயங்கள் முன்னெடுக்கப்பட்டன.
பற்சிதைவுத் தடுப்பு: மாணவர்களின் பற்களைப் பாதுகாப்பதற்கான ‘புளோரைட் வார்னிஷ்’ (Fluoride Varnish) சிகிச்சை வழங்கப்பட்டது.
செயல்முறை விளக்கம்: சரியான முறையில் பல் துலக்கும் நுட்பங்கள் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் செயல்முறை ரீதியாக விளக்கப்பட்டது.
ஆரோக்கிய உணவு: பற்களின் உறுதிக்கும் வாய் ஆரோக்கியத்திற்கும் தேவையான உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்து நிபுணர்கள் விளக்கமளிக்கப்பட்டன.
முற்கூட்டிய கண்டறிதல்: வாய்வழி நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுக்கும் முறைகள் குறித்து சுகாதார உத்தியோகத்தர்களால் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

வாய் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் மாணவர்களுக்கான பல் பரிசோதனை உள்ளிட்ட வைத்தியர்களின் ஆலோசனைகள் பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
