அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை மீறி, குடிநீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்பனை செய்த மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு சுற்றுலா விடுதிகளுக்கு தலா 5 இலட்சம் ரூபா வீதம் மொத்தம் 10 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை நீதவான் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபைக்குக் கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய, மாத்தறை மாவட்ட அலுவலக அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே இந்த மோசடி அம்பலமானது. இது தொடர்பான வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணைகளின் போது, குறித்த விடுதிகள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட பல மடங்கு அதிக விலைக்கு குடிநீரை விற்பனை செய்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
ஒரு லீட்டர் குடிநீர் போத்தலின் அதிகபட்ச சில்லறை விலை 100 ரூபாயாக இருக்க வேண்டிய நிலையில், அதனை 450 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.
500 மில்லி லீட்டர் குடிநீர் போத்தலின் நிர்ணயிக்கப்பட்ட விலை 70 ரூபாயாக இருக்க வேண்டிய நிலையில், அதனை 300 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.
நிர்ணய விலையை மீறி நுகர்வோரைச் சுரண்டும் வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவகங்களுக்கு எதிராகத் தொடர்ந்தும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரித்துள்ளது.