பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ஏ. நஸீல் ஏற்பாட்டில், அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா தலைமையில் இன்று புதன்கிழமை பொத்துவில் பிரதேச செயலக கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது பிரதேசத்தின் அபிவிருத்தி தேவைகள், மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
கூட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடுகளும் அறிவிக்கப்பட்டன.
அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவாவினால் இரண்டு வேலைத்திட்டங்களுக்காக ரூபாய் 5 இலட்சம் ஒதுக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஸீத்தினால் 18 வேலைத்திட்டங்களுக்காக ரூபாய் 52 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன், எம்.எஸ். உதுமாலெப்பையினால் ஒரு வேலைத்திட்டத்திற்காக ரூபாய் 5 இலட்சம் வழங்கப்பட்டது.
மேலும், கிராமிய வீதிகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் நான்கு வேலைத்திட்டங்களுக்காக ரூபாய் 12 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழ் 40 பயனாளிகளுக்கு தலா ரூபாய் 2 இலட்சம் வீதம் வீடமைப்பு நிதி வழங்கப்படவுள்ளதாகவும், 2009 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்நிதி வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இதேவேளை, பிரஜாசக்தி திட்டத்தின் கீழ் 13 வேலைத்திட்டங்களுக்காக ரூபாய் 46 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், பொத்துவில் பிரதேச சபை உதவி தவிசாளர் ஏ. மாபீர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.எம்.எம். சப்ரி, கணக்காளர் எஸ்.எப். சபானா, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், முப்படை அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.