தொலைக்காட்சி கலந்துரையாடல் ஒன்றின்போது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாற்றியமைக்கப்பட்டதாகக் கூறப்படும் புகைப்படமொன்றைக் காண்பித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை, பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க விமர்சித்துள்ளார்.
போலியாக உருவாக்கப்பட்ட புகைப்படமொன்றை நம்பி முன்னாள் அமைச்சர் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தனது சமூகஊடக பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகப் பதிவொன்றில், குறித்த புகைப்படத்தின் அசல் வடிவத்தையும் மாற்றியமைக்கப்பட்டதாகக் கூறப்படும் வடிவத்தையும் சதுரங்க அபேசிங்க பகிர்ந்துள்ளார். அரசியல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்காக மாற்றியமைக்கப்பட்ட புகைப்படத்தை விமல் வீரவன்ச பயன்படுத்தியுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
2022ஆம் ஆண்டு இடம்பெற்ற அரகலய போராட்டத்தின்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஆதரவாளர்களால் போராட்டக்காரர்கள் தாக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், அவர்களைப் பாதுகாக்க உதவிய அமல் என்பவருடன் தாம் எடுத்துக்கொண்ட புகைப்படமே அசல் புகைப்படம் என அபேசிங்க விளக்கமளித்துள்ளார்.
தாக்குதலுக்கு வந்தவர்களை எதிர்கொண்டு, ஏனையோர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னர் போராட்டக்காரர்களைப் பாதுகாக்க முன்வந்த சிறிய குழுவில் அமலும் ஒருவராக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்தச் சம்பவத்தின்போது அமல் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டும் வகையிலேயே குறித்த புகைப்படம் எடுக்கப்பட்டதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எனினும், பின்னர் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அந்தப் புகைப்படம் மாற்றியமைக்கப்பட்டு, அமல் பௌத்த பிக்குவாகத் தோற்றமளிக்கும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அனுபவமிக்க அரசியல்வாதியான விமல் வீரவன்ச, இவ்வாறான செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட புகைப்படமொன்றை எவ்வாறு உண்மையென நம்பி, பிரதான தொலைக்காட்சி அலைவரிசையொன்றில் அது குறித்து விரிவாகக் கலந்துரையாடினார் என்றும் அபேசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், விமல் வீரவன்சவும் அவரது அரசியல் ஆதரவாளர்களும் தமது அரசியல் செயற்பாடுகளுக்காக இன மற்றும் மத முரண்பாடுகளைப் பயன்படுத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.











