முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்சவின் உடல்நிலையை மதிப்பீடு செய்வதற்கும், இதய இரத்த நாளங்களில் அடைப்புகள் உள்ளனவா என்பதைக் கண்டறிவதற்கும் இன்று காலை அவருக்கு குருதிக் குழாய் வரைவி பரிசோதனை (Angiogram) மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், பரிசோதனை முடிவுகளை மருத்துவக் குழு ஆய்வு செய்து, அவருக்கு சத்திரசிகிச்சை அல்லது வேறு சிகிச்சை தேவைப்படுகிறதா என்பதைத் தீர்மானிக்கும் எனக் குறிப்பிட்டார்.
“அந்த நேரத்தில் எந்தவொரு சத்திரசிகிச்சையும் மேற்கொள்ளப்படவில்லை. குருதிக் குழாய் வரைவி பரிசோதனை மட்டுமே நடத்தப்பட்டது” என அமைச்சர் தெரிவித்தார்.
ஷிரந்தி ராஜபக்சவுக்கு இதயத் தமனி மாற்றுப் பைபாஸ் சத்திரசிகிச்சை (CABG) மேற்கொள்ள வேண்டுமா, இதய இரத்த நாளத்தில் ஸ்டென்ட் பொருத்த வேண்டுமா அல்லது வேறு பொருத்தமான சிகிச்சை அளிக்க வேண்டுமா என்பதை மருத்துவக் குழுவே தீர்மானிக்கும் எனவும் அவர் கூறினார்.
இதயத் தமனி மாற்றுப் பைபாஸ் சத்திரசிகிச்சை மற்றும் ஸ்டென்ட் பொருத்துதல் ஆகிய இரண்டுக்கும் நீண்ட காத்திருப்புப் பட்டியல்கள் காணப்படுகின்றபோதிலும், மருத்துவக் குழுவின் பரிந்துரைகள் மற்றும் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலை அவருக்குத் தேவையான சிகிச்சையைத் தாமதமின்றி வழங்கும் என அமைச்சர் ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இதேவேளை, ஷிரந்தி ராஜபக்சவுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் திறந்த இதயச் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக வெளியான தகவல்களை உடனடியாகச் சரிபார்க்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.
அவரது சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் முன்வைத்த சமர்ப்பணங்களைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஒக்டோபர் 12ஆம் திகதி சிறையில் இருந்தபோது ஷிரந்தி ராஜபக்சவுக்கு திடீரென இதயம் தொடர்பான உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதாகவும், பின்னர் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதயச் சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.










