கலகொட அத்தே ஞானசார தேரர் தனிப்பட்ட முறையில் எனது நண்பர். எனினும், அந்த நட்பு அவரை நாட்டின் சட்டத்திற்கு மேலானவராக மாற்றாது என, அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், பௌத்த பிக்குகளை வேண்டுமென்றே இலக்கு வைப்பதாகவும், பௌத்த மதத்தைப் பலவீனப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாகவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.
“ஞானசார தேரரும் எனது நண்பர் தான். ஆனால், இந்த நாட்டில் சட்டம் உள்ளது. அந்தச் சட்டங்களை நாம் உருவாக்கவில்லை. எம்மால் அவர் இந்த நிலைக்குத் தள்ளப்படவும் இல்லை” என அமைச்சர் குறிப்பிட்டார்.
ஞானசார தேரர் முந்தைய அரசாங்கங்களின் ஆட்சிக் காலங்களிலும் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், தற்போதைய சர்ச்சையானது அவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் முதல் சந்தர்ப்பம் அல்ல என்றும் தெரிவித்தார்.
ஞானசார தேரர் எதிர்கொண்டுள்ள நிலைமையை சில எதிர்க்கட்சிக் குழுக்கள் தமது அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதாகவும், அரசியல் நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுப்பதற்காக அவர் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் லால்காந்த குற்றஞ்சாட்டினார். அதேவேளை, தற்போது சிறையில் உள்ள ஏனைய பௌத்த பிக்குகள் தொடர்பில் ஏன் இதேபோன்ற கரிசனைகள் முன்வைக்கப்படுவதில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, மூத்த பௌத்த மதத் தலைவர்களுடன் ஏற்கனவே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும், சட்டத் திருத்தங்கள் குறித்து ஆராய அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
பௌத்த பிக்குகளின் காவியுடைக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் அவர்களுக்குத் தண்டனை வழங்கப்படுவதைத் தாம் தனிப்பட்ட முறையில் விரும்பவில்லை எனக் குறிப்பிட்ட அவர், சட்டத்தை மீறுபவர்கள் உரிய தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் என்றாலும், மத அடையாளமான காவியுடை தண்டனைக்கு உட்படுத்தப்படக் கூடாது எனவும் வலியுறுத்தினார்.
மேலும், தனிநபர்களுக்கு ஏற்ப வெவ்வேறு சட்ட நடைமுறைகளைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, தற்போதுள்ள சட்டக் கட்டமைப்பில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டுமாயின் உரிய தரப்பினருடன் கலந்தாலோசித்து, முறையான நடைமுறைகளின் ஊடாகவே அவற்றை முன்னெடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்தார்.










