மட்டக்களப்பில், கடந்த 2008 ஆம் ஆண்டு, 5 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவர் உள்ளிட்ட 3 பேரை, எதிர்வரும் ஒக்டோபர் 27 ம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அண்ணாத்துரை தஷ்ஷினி இன்று செவ்வாய்க்கிழமை காணொளி ஊடாக உத்தரவிட்டார்.
2008 ஆம் ஆண்டு, கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை, ரி.எம்.வி.பி கட்சி உறுப்பினர் உட்பட இருவர் காத்தான்குடியில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டமை, வவுணதீவு கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை கடத்தி கொலை செய்யப்பட்டமை, ஆகிய 5 கொலை சம்பவங்கள் தொடர்பாக இந்த வழக்கு இடம்பெற்று வருகின்றது
இந்த கொலைச் சம்பவங்கள் தொடர்பாக, முன்னதாக 2025 ஏப்ரல் மாதம் பயங்கரவாத தடைச் சட்டத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் காத்தான்குடியை சேர்ந்த இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத் ஆகியோரை, கடந்த 2025 நவம்பர் மாதம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்த 5 முக்கிய மனிதக் கொலைகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 4 பேருக்கு எதிராக, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த 2026 யூன் 17 ம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் வழக்கு தாக்கல் செய்து, அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி, தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், குறித்த வழக்கு விசாரணைக்கு இன்று செவ்வாய்க்கிழமை திறந்த நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களான இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத் ஆகியோர் முன்னிலையானதுடன், பிள்ளையான் காணொளி மூலம் நீதிமன்றில் முன்னிலையானார்.
இதனை தொடர்ந்து பிள்ளையான் உட்பட 3 பேரையும் தொடர்ந்து எதிர்வரும் 27 திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், லண்டனில் உள்ள மற்றொரு சந்தேக நபரான பொலிஸ் பாயிஸ் என்றழைக்கப்படும் முகமட் பாய்ஸ்க்கு தொடர்ந்து பிடிவிறாந்து பிறப்பித்தார்.










