முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ தொடர்புடையதாகக் கூறப்படும் நிதி முறைகேடு விசாரணையில், கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு CT ஸ்கேனர் ஒன்றைக் கொள்வனவு செய்வதாகக் கூறி, ஒரு கோடி ரூபாய் பணம், தேசிய சேமிப்பு வங்கிக்குச் (NSB) சொந்தமான சிரிலிய சவிய கணக்கிற்கு மாற்றப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு புதிய தகவல்களை நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
சிறுவர் வைத்தியசாலைக்கு CT ஸ்கேனர் ஒன்றைக் கொள்வனவு செய்வதாகக் கூறி, ‘கார்ல்டன் சுவ உதான’ என்ற திட்டத்தின் ஊடாக நிதி சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதற்காக தேசிய சேமிப்பு வங்கி, செலான் வங்கி மற்றும் ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட பல நிறுவனங்களிடம் நிதியுதவி கோரி கடிதங்கள் அனுப்பப்பட்டதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆரம்பத்தில் CT ஸ்கேனரைக் கொள்வனவு செய்வதற்கு 14 கோடி ரூபாய் தேவைப்படுவதாகக் கடிதங்களில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், பின்னர் அந்தத் தொகை வாய்மொழியாக ஐந்து கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
முன்னாள் முதற்பெண் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, தேசிய சேமிப்பு வங்கியின் பணிப்பாளர் சபை ஒரு கோடி ரூபாய் நிதியுதவிக்கு அனுமதி வழங்கியதாகவும் அரச தரப்பு குறிப்பிட்டது.
எனினும், அந்தப் பணம் கார்ல்டன் சுவ உதான திட்டத்திற்குச் சொந்தமான வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படவில்லை என விசாரணையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மாறாக, மருதானை சுதுவெல்ல பகுதியில் அமைந்துள்ள மக்கள் வங்கிக் கிளையில் பேணப்பட்ட சிரிலிய சவிய கணக்கிற்கு அந்த நிதி மாற்றப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சீனாவால் வழங்கப்பட்ட CT ஸ்கேனர்
லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு இறுதியாக வழங்கப்பட்ட CT ஸ்கேனரின் உண்மையான மூலத்தைக் குறித்தும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கேள்வி எழுப்பியுள்ளது.
குறித்த வைத்திய உபகரணத்தை சீன அரசாங்கமே வைத்தியசாலைக்கு வழங்கியதாக அரச தரப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், அந்த ஸ்கேனர் தமது அமைப்பினால் நன்கொடையாக வழங்கப்பட்டதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ஷிரந்தி ராஜபக்ஷ அதனை வைத்தியசாலைக்கு வழங்கியதாக விசாரணையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அவரது மகன்களில் ஒருவரின் பிறந்தநாளன்று இந்த நிகழ்வு இடம்பெற்றதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குறித்த காலப்பகுதியில் லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலைக்கு பணியாற்றிய இரண்டு வைத்தியர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சிரிலிய சவிய அமைப்பிடம் இருந்து CT ஸ்கேனர் ஒன்றைக் கோரி வைத்தியசாலை ஒருபோதும் விண்ணப்பிக்கவில்லை என இரு வைத்தியர்களும் தெரிவித்துள்ளதாகவும் அரச தரப்பு குறிப்பிட்டது.
மேலும், சிரிலிய சவிய அமைப்பு முறையாக அரச சார்பற்ற நிறுவனமாகப் பதிவு செய்யப்படவில்லை என்றும், தேவையான நிதி அறிக்கைகள் மற்றும் வருடாந்த அறிக்கைகளைச் சமர்ப்பிக்கத் தவறியுள்ளதாகவும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது. நன்கொடைகளைப் பெற்றுக்கொள்வதற்காக அரச இலச்சினை பொறிக்கப்பட்ட உத்தியோகபூர்வ கடிதத் தலைப்புகள் பயன்படுத்தப்பட்டதாகவும், ஜனாதிபதி செயலகத்தின் முகவரி மற்றும் தொலைபேசி இலக்கங்களும் அமைப்பின் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அரச நிறுவனங்களின் மீது செல்வாக்குச் செலுத்தும் நோக்கத்துடனேயே இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், மேலும் சில சந்தேகநபர்கள் கைது செய்யப்படலாம் என்றும் அரச தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நிதிக் குற்ற விசாரணைப் பிரிவும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.
விசாரணைகள் தொடர்வதைக் காரணமாகக் குறிப்பிட்டு, ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு பிணை வழங்குவதற்கும் அரச தரப்பு எதிர்ப்புத் தெரிவித்தது. இதையடுத்து, ஒக்டோபர் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டார்.










