போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட பணத்தைப் பயன்படுத்திக் கொள்வனவு செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும், சுமார் 2.2 கோடி ரூபா பெறுமதியான பி.எம்.டபிள்யூ (BMW) சொகுசு வாகனத்தை முடக்குவதற்கு இலங்கைப் பொலிஸார் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட நீர்கொழும்பைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர், சட்டவிரோத போதைப்பொருள் நடவடிக்கைகள் மூலம் ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி, தனது மகனின் பெயரில் சொத்துகளைக் கொள்வனவு செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட பணத்தைக் கொண்டு குறித்த சொத்து கொள்வனவு செய்யப்பட்டதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, கறுப்புப் பணச் சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ், குறித்த பி.எம்.டபிள்யூ வாகனத்தை ஒக்டோபர் 13ஆம் திகதி முதல் 14 நாட்களுக்கு முடக்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் வாகனத்தை விற்பனை செய்தல், வேறு ஒருவருக்கு உரிமை மாற்றுதல் அல்லது வேறு எந்தவொரு கொடுக்கல் வாங்கலிலும் ஈடுபடுத்துதல் ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்குரிய சொத்துகளுக்கான நிதியின் மூலத்தைக் கண்டறிவதுடன், சட்டவிரோதமாகச் சொத்துகள் ஈட்டப்பட்டுள்ளனவா என்பதை ஆராய்வதற்கும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.










