இலங்கையில் தகவல் தொழில்நுட்பத் துறையின் திறன்களை மேம்படுத்துவதுடன், அத்துறையில் பட்டதாரிகள் எதிர்கொள்ளும் வேலைவாய்ப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், சிங்கப்பூருடன் இணைந்து விஜயராமவில் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மையமொன்றை நிறுவுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற பொருளாதார மற்றும் முதலீட்டு உச்சி மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, முன்மொழியப்பட்டுள்ள இந்த மையத்திற்கான அமைச்சரவை அனுமதியை அடுத்த வாரம் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.
இலங்கையின் தகவல் தொழில்நுட்பத் துறையில் மேம்பட்ட தொழில்நுட்பத் திறன்களை வளர்ப்பதுடன், பட்டதாரிகளுக்குப் பொருத்தமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் இந்த முயற்சியின் முக்கிய நோக்கங்களாகும்.
அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 17,000 மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் துறைக்குள் பிரவேசித்தாலும், அவர்களுக்குப் பொருத்தமான வேலைவாய்ப்புகளை வழங்குவதில் இலங்கை சவால்களை எதிர்கொள்வதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இத்துறையில் தற்போது நிலவும் முக்கிய பிரச்சினை பணியாளர்களின் பற்றாக்குறை அல்ல என்றும், பட்டதாரிகளிடம் காணப்படும் தொழில்நுட்பத் திறன்களின் மட்டமே பிரதான சவாலாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது பல பட்டதாரிகள் இடைநிலைத் தொழில்நுட்பத் திறன்களையே கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதேவேளை மேம்பட்ட தொழில்நுட்பத் துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதாகவும் கூறினார். செயற்கை நுண்ணறிவு, பாரிய தரவுப் பகுப்பாய்வு (Big Data), குவாண்டம் கணினியியல் (Quantum Computing) மற்றும் பிளொக்செயின் தொழில்நுட்பம் (Blockchain) போன்ற துறைகளின் தேவைகளுக்கு ஏற்ப இலங்கையின் தகவல் தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சி முறைகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், வணிகச் செயல்முறை வெளிப்பணியளிப்பு நிறுவனங்கள் (BPO) மற்றும் தொலைதூரப் பணிமுறைகள் ஊடாக இலங்கையர்களுக்கான சர்வதேச வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். வேகமாக வளர்ச்சியடைந்து வரும் உலகளாவிய தகவல் தொழில்நுட்பத் துறைக்குத் தேவையான மேம்பட்ட தொழில்நுட்பத் திறன்களைக் கொண்ட பட்டதாரிகளை உருவாக்கும் வகையில் பல்கலைக்கழகப் பட்டப்படிப்புகளும் மாற்றியமைக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் தகவல் தொழில்நுட்பத் துறையை அதிக பெறுமதி கொண்ட மேம்பட்ட தொழில்நுட்பத் துறைகளை நோக்கி நகர்த்துவதன் மூலமே பட்டதாரிகள் எதிர்கொள்ளும் வேலைவாய்ப்புச் சவால்களுக்குத் தீர்வு காண முடியும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.










