கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கைகளின்போது, 801 மறுபயன்பாட்டு பிளாஸ்டிக் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மறுபயன்பாட்டுக்குரிய பிளாஸ்டிக் போத்தல்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை இலக்காகக் கொண்டு இந்த சோதனை மற்றும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. விசாரணைகளின் ஒரு பகுதியாக குறித்த போத்தல்கள் அதிகாரிகளின் பொறுப்பில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு எதிராக உரிய நீதவான் நீதிமன்றங்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகார சபை தெரிவித்துள்ளது.
குடிநீர் உள்ளிட்ட குடிப்பதற்கான திரவங்களை எடுத்துச் செல்வதற்காக பயன்படுத்தப்படும் மறுபயன்பாட்டு பிளாஸ்டிக் போத்தல்கள் SLS 1616 தரநிலைக்கு உட்பட்டவை என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
இலங்கையில் தயாரிக்கப்படும் மறுபயன்பாட்டு பிளாஸ்டிக் போத்தல்களில் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தினால் (SLSI) வழங்கப்படும் SLS தயாரிப்பு சான்றிதழ் குறியீடு இடம்பெற்றிருக்க வேண்டும்.
இறக்குமதி செய்யப்படும் மறுபயன்பாட்டு பிளாஸ்டிக் போத்தல்களுக்கு SLS குறியீடு கட்டாயமாக இல்லை. எனினும், அவை SLSI இறக்குமதி ஆய்வுத் திட்டத்தின் கீழ் பரிசோதிக்கப்பட்டு விற்பனைக்கு அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
மறுபயன்பாட்டு பிளாஸ்டிக் போத்தல்களை கொள்வனவு செய்வதற்கு அல்லது விற்பனைக்கு வைப்பதற்கு முன்னர், உரிய சட்ட மற்றும் தரநிலைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை வர்த்தகர்கள் உறுதி செய்ய வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், பொருட்களின் மூலத்தை உறுதிப்படுத்தவும் விநியோகச் சங்கிலியை கண்காணிக்கவும் விலைப்பட்டியல், ரசீதுகள் மற்றும் விநியோகஸ்தர்களின் தகவல்களை முறையாகப் பராமரிக்குமாறும் வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மறுபயன்பாட்டு பிளாஸ்டிக் போத்தல்களை கொள்வனவு செய்யும் நுகர்வோர், அதில் SLS தயாரிப்பு சான்றிதழ் குறியீடு உள்ளதா என்பதை பரிசோதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இறக்குமதி செய்யப்பட்ட போத்தல்களை கொள்வனவு செய்யும்போது, அவற்றுக்கான உரிய அனுமதி தொடர்பான தகவல்களை வர்த்தகர்களிடம் பெற்றுக்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொள்வனவு செய்ததற்கான ஆதாரமாக விற்பனைப் பத்திரம் அல்லது ரசீதைப் பெற்றுக்கொண்டு பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் நுகர்வோரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மறுபயன்பாட்டு பிளாஸ்டிக் போத்தல்களை விற்பனை செய்யும்போது உரிய சட்ட மற்றும் தரநிலைத் தேவைகளை பூர்த்தி செய்வது வர்த்தகர்களின் பொறுப்பு என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், நாடளாவிய ரீதியில் சோதனைகள் மற்றும் சுற்றிவளைப்புகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அதிகார சபை அறிவித்துள்ளது.










