ஜே.வி.பி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான கட்சிக் குழுவினர், இந்தியாவுக்கான தற்போதைய விஜயத்தின்போது பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க) தேசிய பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல். சந்தோஷை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
பாஜகவின் அழைப்பின் பேரில் ஜே.வி.பி. குழுவினர் இந்தியாவுக்கு மேற்கொண்டுள்ள விஜயத்தின் ஒரு பகுதியாக, கடந்த திங்கட்கிழமை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பாஜகவின் வரலாறு மற்றும் அதன் அமைப்பு கட்டமைப்பு தொடர்பில் ஜே.வி.பி. குழுவினருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கிராம மட்டம் வரையிலும் கட்சி உறுப்பினர் சேர்க்கையை பா.ஜ.க எவ்வாறு முன்னெடுக்கிறது என்பது தொடர்பிலும் தகவல்கள் பகிரப்பட்டுள்ளன.
இந்தியாவின் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்கள் குறித்தும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி வழங்கி வரும் தலைமைத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான உறவுகளையும் நட்புறவையும் மேலும் வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஜே.வி.பி. மற்றும் பா.ஜ.க-வுக்கு இடையிலான நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் இருதரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர்.
இந்த விஜயத்தின் மற்றுமொரு பகுதியாக, பா.ஜ.க-வின் மகளிர் அமைப்பின் தேசியத் தலைவர் ரூப்குமாரி சௌத்ரியுடனும் ஜே.வி.பி குழுவினர் கலந்துரையாடியுள்ளனர்.
அத்துடன், பா.ஜ.க-வின் இளைஞர் அமைப்பின் பிரதிநிதிகளான வினீத் வாட்ஸ் தியாகி மற்றும் பக்தி சர்மா ஆகியோருடனும் தனியான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.










