மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மக்கள் தொகை தரவுகளில் வடக்கு மாகாணத்திற்கான எண்ணிக்கை தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
“வடக்கு மாகாணம் தொடர்பில் மத்திய வங்கி அறிக்கையில் முற்றிலும் தவறான தரவு வழங்கப்பட்டுள்ளது. வடக்கின் மக்கள் தொகை 557,000 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் உண்மையான மக்கள் தொகை இதைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமாகும்” என சுமந்திரன் தனது ‘X’ தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
சுமந்திரன் பகிர்ந்துள்ள “Country Profile – 2025” அட்டவணையில், இலங்கையின் மொத்த மக்கள் தொகை 21.756 மில்லியன் எனவும், வடக்கு மாகாணத்தின் மக்கள் தொகை 557,000 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே அட்டவணையில் மேல் மாகாணத்தின் மக்கள் தொகை 6.104 மில்லியன், மத்திய மாகாணம் 2.712 மில்லியன், தென் மாகாணம் 2.603 மில்லியன், கிழக்கு மாகாணம் 1.784 மில்லியன், வடமேல் மாகாணம் 2.583 மில்லியன், வடமத்திய மாகாணம் 1.406 மில்லியன், ஊவா மாகாணம் 1.401 மில்லியன் மற்றும் சப்ரகமுவ மாகாணம் 2.012 மில்லியன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தரவுகளின்படி, வடக்கு மாகாணத்தின் மக்கள் தொகை 1,150,148 ஆகும். இது இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 5.3 சதவீதமாகும்.
மாவட்ட ரீதியான கணக்கெடுப்பு தரவுகளின்படி, யாழ்ப்பாணத்தில் 594,751 பேரும், மன்னாரில் 123,756 பேரும், வவுனியாவில் 172,312 பேரும், முல்லைத்தீவில் 122,619 பேரும், கிளிநொச்சியில் 136,710 பேரும் வசிப்பதாக பதிவாகியுள்ளது.
இதன்படி, மத்திய வங்கி அறிக்கையின் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 557,000 என்ற எண்ணிக்கை, அண்மைய உத்தியோகபூர்வ மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பதிவான வடக்கு மாகாண மக்கள் தொகையின் பாதிக்கும் குறைவானதாகும்.










