திருத்தியமைக்கப்பட்ட தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன் மூலம் இந்த ஆண்டு முதலாம் தரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி சீர்திருத்தங்களைத் தொடர்வதுடன், இரண்டாம் மற்றும் ஆறாம் தரங்களுக்கான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் முன்வைத்த முன்மொழிவின் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட திட்டத்தின் கீழ், 2026ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படவிருந்த ஆறாம் தர கல்வி சீர்திருத்தங்கள் 2027ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், இந்த ஆண்டு முதலாம் தரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளன.
2027ஆம் ஆண்டுக்கான முதலாம் மற்றும் இரண்டாம் தரங்களின் மூன்று தவணைகளுக்குமான செயற்பாட்டு நூல்கள் மற்றும் ஆசிரியர் வழிகாட்டிகள் அச்சிடுவதற்கு தயார்படுத்தப்பட்டுள்ளன. அதேபோன்று, ஆறாம் தரத்திற்கான மூன்று தவணைகளையும் உள்ளடக்கிய பாடத்தொகுதிகள் மற்றும் அதற்கான ஆசிரியர் வழிகாட்டிகளும் தயாரிக்கப்பட்டுள்ளன.
தேசிய கல்வி நிறுவகம் (NIE) ஆரம்ப மற்றும் இடைநிலைப் பிரிவுகளின் அனைத்து பாடங்களுக்குமான முதன்மைப் பயிற்றுநர்களுக்கு பயிற்சி வழங்கியுள்ளது. மாகாண மட்டத்தில் ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை வழங்குவதற்கான திட்டங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன.
தேசிய கல்வி நிறுவகத்தினால் தயாரிக்கப்பட்ட முந்தைய பாடத்திட்டக் கட்டமைப்பு மீளாய்வு செய்யப்பட்டு, அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்த செயல்முறையின் போது முன்வைக்கப்பட்ட அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்டு புதிய பாடத்திட்டக் கட்டமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் திகதி புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான தேசிய வழிநடத்தல் குழு இணக்கம் தெரிவித்துள்ளது.
மேலும், பாடசாலை வளங்களை கருத்திற்கொண்டு, பாடசாலை மட்ட மதிப்பீடு மற்றும் பரீட்சை முறைகள் தொடர்பான புதிய கொள்கை வழிகாட்டியும் தயாரிக்கப்பட்டு, சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கல்வி சீர்திருத்தத்தின் ஆரம்பத் திட்டத்தின் கீழ், 2026ஆம் ஆண்டு முதலாம் மற்றும் ஆறாம் தரங்களுக்கான புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவிருந்தது. எனினும், முதலாம் தர சீர்திருத்தங்களை இந்த ஆண்டிலும், ஆறாம் தர சீர்திருத்தங்களை 2027ஆம் ஆண்டிலும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் பின்னர் தீர்மானித்தது.










