இலங்கையின் உள்நாட்டு பால் உற்பத்தித் துறையை மேம்படுத்தும் நோக்கில், பிரேசிலுடன் புதிய தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் முன்வைத்த முன்மொழிவின் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கான அடிப்படை ஒப்பந்தம் 2008ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் கைச்சாத்திடப்பட்டிருந்த நிலையில், 2023ஆம் ஆண்டு பிரேசில் நிபுணர்கள் இலங்கைக்கு மேற்கொண்ட தொழில்நுட்ப ஆய்வுப் பயணத்தின் பின்னர் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பயணத்தின்போது இலங்கையின் பால் மற்றும் கரும்பு உற்பத்தித் துறைகள் குறித்து அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
கள ஆய்வுகளின் முடிவுகள் மற்றும் இலங்கை தேசிய விஞ்ஞான மன்றம் முன்வைத்த கருத்திட்ட ஆவணத்தின் அடிப்படையில், இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான செயற்திட்டக் கட்டமைப்பில் இரு நாடுகளும் இணக்கம் எட்டியுள்ளன.
புதிய முன்மொழிவின் கீழ், இலங்கை பிரேசில் வெளிவிவகார அமைச்சின் பிரேசில் ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்துடனும், Federal University of Viçosa பல்கலைக்கழகத்துடனும் நேரடியாக இணைந்து செயற்படவுள்ளது.
மேலும், இரு அரசாங்கங்களுக்கும் இடையிலான துணை ஒப்பந்தத்தை (Complementary Adjustment Agreement) கைச்சாத்திடுவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் இலங்கையின் பால் உற்பத்தித் திறனை மேம்படுத்த பிரேசிலின் தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவத்தைப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.










