இலங்கையின் வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81ஆவது அமர்வின் (UNGA81) பக்க நிகழ்வுகளுக்கு இடையே ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நட்புறவானதும் ஆக்கபூர்வமானதுமான இந்த சந்திப்பின்போது, இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் சீர்திருத்தங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், அத்துடன் நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் விஜித ஹேரத், ஐ.நா. பொதுச் செயலாளருக்கு விளக்கமளித்துள்ளார்.
வளர்ந்து வரும் நாடுகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் சர்வதேச நிதிக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்தும் இருதரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர். மேலும், ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கு இலங்கை வழங்கி வரும் பங்களிப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இதனிடையே, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81ஆவது அமர்வின் போது அணு ஆயுதங்களை முழுமையாக ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை நினைவுகூர்ந்து அதனை முன்னெடுப்பதற்காக நடைபெற்ற உயர்மட்ட முழுமையான கூட்டத்திலும் அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்றார்.
அங்கு உரையாற்றிய அவர், அணு ஆயுதங்களை முற்றாக ஒழிப்பதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியதுடன், அணு ஆயுதங்களை முழுமையாக ஒழிப்பதற்கான உறுதியான மற்றும் காலவரையறுக்கப்பட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அழைப்பு விடுத்தார்.
அத்துடன், வளங்களை அபிவிருத்தி, சுகாதாரம், கல்வி மற்றும் காலநிலை நடவடிக்கைகளுக்கு திருப்பி விட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81ஆவது அமர்வின் பக்க நிகழ்வொன்றில், ஐக்கிய நாடுகளின் செயல்பாட்டு ஆதரவுக்கான துணைப் பொதுச் செயலாளர் அதுல் காரேவையும் அமைச்சர் விஜித ஹேரத் சந்தித்துக் கலந்துரையாடினார்.
ஐ.நா. அமைதி காக்கும் நடவடிக்கைகள் மற்றும் ஐ.நா. பாதுகாப்புச் சபையால் அங்கீகரிக்கப்பட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை அமைதி காக்கும் படையினருக்கு செயல்பாட்டு ஆதரவை வழங்கி வருவதற்காக ஐக்கிய நாடுகளுக்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார்.
மேலும், ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் இலங்கை நீண்டகாலமாக கடைப்பிடித்து வரும் உறுதிப்பாட்டையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.










