ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாதகமான வளிமண்டல நிலை உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று புதன்கிழமை பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களின் பல பகுதிகளிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
மேல் மாகாணத்தின் கடலோரப் பகுதிகள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் காலை வேளையில் சில இடங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். அதேவேளை, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.
இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக ஏற்படக்கூடிய உள்ளூர்மயமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதனிடையே, சிலாபம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். மாலை அல்லது இரவு வேளைகளில் முல்லைத்தீவு முதல் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகம் மணிக்கு 20 முதல் 30 கிலோமீற்றர் வரை காணப்படும் எனவும், காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும், புத்தளம் முதல் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளிலும் அவ்வப்போது காற்றின் வேகம் மணிக்கு 45 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும், புத்தளம் முதல் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக காணப்படக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்றுடன் கூடிய கொந்தளிப்பான கடல் நிலை ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் எச்சரித்துள்ளது.










