பொலன்னறுவை தேசிய சிறுநீரக மருத்துவமனையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தால் சேதமடைந்த பகுதிகளை சீரமைப்பதற்கு இலங்கை இராணுவத்தின் உதவியைப் பெற்றுக்கொள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இணக்கம் தெரிவித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், சம்பவம் மற்றும் மருத்துவமனைக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் கலந்துரையாடியதாக கூறினார்.
உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி தன்னிடம் கேட்டதாகவும், சேதமடைந்த கட்டிடத்தை விரைவாக சீரமைத்து மருத்துவமனையின் வழமையான செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க வேண்டியதன் அவசியத்தை தாம் வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
இராணுவத்துக்கு அறிவித்து விரைவில் சீரமைப்புப் பணிகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கவலை வெளியிட்ட அவர், சம்பவம் இடம்பெற்ற உடனேயே பல தொலைபேசி அழைப்புகளைப் பெற்றதாகவும், பின்னர் மருத்துவமனைக்கு ஏற்பட்ட சேதங்களை காட்டும் புகைப்படங்களைப் பார்த்ததாகவும் தெரிவித்தார்.
தாம் சீனாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிடம் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து சீனாவின் உதவியுடன் இந்த மருத்துவமனை நிர்மாணிக்கப்பட்டதாகவும், எனவே இந்த மருத்துவமனை தமக்கு மிகவும் முக்கியமானது என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
“இந்த சம்பவம் மிகவும் கவலைக்குரியது. சம்பவம் இடம்பெற்ற உடனேயே எனக்கு பல அழைப்புகள் வந்தன. பிற்பகலில் கட்டிடத்துக்கு ஏற்பட்ட சேதங்களின் புகைப்படங்களைப் பார்த்தேன். அதனைப் பார்ப்பது மிகவும் வேதனையாக இருந்தது” என தெரிவித்தார்.
வெடிப்பில் மருத்துவமனை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
சம்பவம் தொடர்பில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சீனத் தூதுவருக்கு அறிவித்துள்ளதாகவும், மருத்துவமனையின் செயற்பாடுகளை மீள வழமைக்கு கொண்டுவருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மற்றும் உதவிகளை வழங்குமாறு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் சீன அரசாங்கத்தின் ஆதரவுடன் மருத்துவமனையை மீள சீரமைத்து அதன் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டுவர முடியும் என தாம் நம்புவதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.
பொலன்னறுவை தேசிய சிறுநீரக மருத்துவமனையின் சமையலறை பகுதியில் கடந்த சனிக்கிழமை அதிகாலை சுமார் 4.30 மணியளவில் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது. இதில் பலர் காயமடைந்ததுடன், சமையலறை அமைந்திருந்த கட்டிடம் பெருமளவில் சேதமடைந்தது.
வெடிப்பில் ஏற்பட்ட காயங்களால் மருத்துவமனை ஊழியர் ஒருவர் பின்னர் உயிரிழந்த நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.










