வாராந்தர உடற்பயிற்சி வழக்கத்தில் 90 நிமிடங்கள் முதல் இரண்டு மணிநேரம் வரை பளு தூக்கும் பயிற்சிகளை (Weight Training) மேற்கொள்வது, முன்கூட்டியே ஏற்படும் மரண அபாயத்தை 13 சதவீதத்தால் குறைப்பதாகப் புதிய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசின் (British Journal of Sports Medicine) இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வின்படி, இத்தகைய பலு தூக்கும் பயிற்சிகள் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 19 சதவீதத்தாலும், நரம்பியல் நோய்களின் அபாயத்தை 27 சதவீதத்தாலும் குறைக்கின்றன.
இதற்காக ஸ்குவாட்ஸ் (Squats), லஞ்சஸ் (Lunges) மற்றும் டம்பல்ஸ் (Dumbbell) போன்ற பயிற்சிகளைச் சிறந்த உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.
‘ஸ்போர்ட் England’ அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சியில், பளு தூக்கும் பயிற்சிகளுடன் சைக்கிள் ஓட்டுதல் அல்லது ஓட்டம் (Jogging) போன்ற ஏரோபிக் (Aerobic) பயிற்சிகளையும் இணைத்துச் செய்யும்போது, ஆண்டொன்றுக்கு 33 இலட்சம் நாள்பட்ட நோய் பாதிப்புகளைத் தடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சுகாதாரத் துறைக்கான பில்லியன் கணக்கான செலவுகளைச் சேமிக்க முடியும் என அந்த அமைப்பின் மூலோபாயத் தலைவர் டாம் பர்டன் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுமார் 30 ஆண்டுகாலமாக, 1 இலட்சத்து 47 ஆயிரத்திற்கும் அதிகமானோரை உட்படுத்தி நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ஏரோபிக் மற்றும் பளு தூக்கும் பயிற்சிகள் இரண்டையும் அதிகளவில் செய்தவர்களுக்கு நோய் அபாயங்கள் 58 சதவீதம் வரை குறைந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
முதுகு, வயிறு, மார்பு, தோள்கள், கைகள் மற்றும் கால்கள் போன்ற உடலின் அனைத்து முக்கிய தசைப் பகுதிகளுக்கும் வாரத்திற்கு குறைந்தது இரண்டு நாட்களாவது இவ்வாறான பலு தூக்கும் பயிற்சிகளை வழங்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வாரத்திற்கு 150 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப்பயிற்சி அல்லது 75 நிமிடங்கள் ஓட்டம் போன்ற ஏரோபிக் பயிற்சிகளில் ஈடுபடுவதும் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது என இந்த ஆய்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது.