பசுபிக் பெருங்கடலில் உருவாகி வரும் ‘எல் நினோ’ காலநிலை மாற்றம் வலுவடைந்தால், எதிர்வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இலங்கையில் கடுமையான வறட்சி நிலை ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
ஜூன் மற்றும் ஒகஸ்ட் மாதங்களுக்கு இடையில் எல் நினோ காலநிலை உருவாவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக வானிலை அமைப்பு விடுத்துள்ள கணிப்புகளைத் தொடர்ந்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள வளிமண்டலவியல் திணைக்களத்தின் தற்காலிக பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன, எதிர்வரும் மாதங்களில் எல் நினோ நிலைமைகள் உருவாவதற்கு 82 சதவீதத்திற்கும் அதிகமான சாத்தியக்கூறுகள் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மழைவீழ்ச்சி கணிசமாகக் குறையும் எனவும் அவர் தெரிவித்தார்.
வழக்கமாக 9 முதல் 12 மாதங்கள் வரை நீடிக்கும் இந்த எல் நினோ தாக்கத்தின் விளைவுகள், இலங்கையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நீடிக்கலாம் எனவும், நவம்பர் முதல் ஜனவரி வரையான காலப்பகுதியில் இது 40 சதவீத சாத்தியக்கூறுகளுடன் பலத்த எல் நினோவாக மாற வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
எனவே, இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் சுகாதாரம், மின்சக்தி, நீர்ப்பாசனம், விவசாயம் மற்றும் வள மேலாண்மை ஆகிய துறைகள் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.