பிரித்தானியாவில் சட்டப்பூர்வமாக வசித்து வரும் புலம்பெயர் பராமரிப்புப் பணியாளர்களின் ஐந்து வயதுடைய சிறு பிள்ளைகள் உட்பட பலரை, உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரித்தானிய உள்துறை அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
அவர்களது பெற்றோருக்கு அந்நாட்டில் தங்கியிருப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையிலும், பிள்ளைகளுக்கு இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக உள்துறை அமைச்சு சிறுவர்களுக்கு அனுப்பிய ஐந்து கடிதங்களை ‘தி கார்டியன்’ நாளிதழ் நேரடியாகப் பார்வையிட்டுள்ளது. அத்துடன், ஆறு மாதக் கர்ப்பிணியான பெண் ஒருவர், பிரித்தானியாவில் உள்ள தனது கணவரைப் பிரிந்து சொந்த நாட்டிற்குத் திரும்புமாறு கோரும் ஆறாவது கடிதம் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த 2024 மார்ச் மாதத்திற்கு முன்னர் வரை, பராமரிப்புப் பணியாளர் விசா மூலம் பிரித்தானியாவுக்கு வருபவர்கள் தங்களது வாழ்க்கைத்துணை மற்றும் பிள்ளைகளைத் தங்களோடு அழைத்து வர அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இருப்பினும், 2023 ஆம் ஆண்டில் சுமார் 100,000 பராமரிப்பு விண்ணப்பதாரர்களுடன் மேலும் 120,000 குடும்ப உறுப்பினர்கள் பிரித்தானியாவில் இணைந்துள்ளதாக உள்துறை அமைச்சு மதிப்பிட்டதைத் தொடர்ந்து, இந்த விசாக்கள் மீது அரசாங்கம் கெடுபிடிகளைத் தொடங்கியது.
இதற்கமைய மார்ச் 2024 முதல் பராமரிப்புப் பணியாளர்கள் தங்களது பங்காளிகள் அல்லது பிள்ளைகளை அழைத்து வர தடை விதிக்கப்பட்டது.
ஜூலை 2025 முதல் பராமரிப்புப் பணிகளுக்காக வெளிநாடுகளில் இருந்து ஆட்களை வேலைக்கு அமர்த்துவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டது.
இருப்பினும், தற்போது நாட்டை விட்டு வெளியேறுமாறு கடிதம் கிடைத்துள்ள பிள்ளைகள் அனைவரும், இந்தத் தடைகளும் கட்டுப்பாடுகளும் அமுலுக்கு வருவதற்கு முன்பே பிரித்தானியாவுக்கு வந்தவர்களாவர்.
ஸ்கொட்லாந்தின் பேர்ர்த் பகுதியில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த பராமரிப்புப் பணியாளரான வருணி ஆராய்ச்சி மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த உத்தரவினால் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். வேதியியலில் முதுகலைப் பட்டதாரியான வருணி, டண்டி பல்கலைக்கழகத்தில் பட்டமும் பெற்றவர். தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் அவரது கணவர் இயற்பியல் மற்றும் கணிதப் பட்டதாரியாவார்.
“நாங்கள் 2022 கிறிஸ்மஸ் தினத்தில் இங்கு வந்ததிலிருந்து சட்டப்பூர்வமாகவே வாழ்ந்து வருகிறோம். எனது விசா 2031 வரை உள்துறை அமைச்சினால் நீடிக்கப்பட்டுள்ளது. ஆனால் எனது விசா மூலம் இங்கு வந்த எனது கணவரும், 8 மற்றும் 5 வயதுடைய எனது இரு பிள்ளைகளும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. நாங்கள் ஆயிரக்கணக்கான பவுண்டுகளை விசா கட்டணமாகச் செலுத்தியுள்ளோம், வரிகளையும் சரியாகக் கட்டுகிறோம், அரசாங்கத்தின் எந்தவொரு சலுகைகளையும் கோரவில்லை” என வருணி கவலையுடன் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, அக்டோபர் 2022 இல் பிரித்தானியாவுக்கு வந்து நோர்த்தம்ப்ரியா பல்கலைக்கழகத்தில் வணிக முகாமைத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற மற்றுமொரு பராமரிப்புப் பணியாளரான ரசிக சமரசிங்க என்பவரின் குடும்பத்திற்கும் இந்நிலை ஏற்பட்டுள்ளது. உதவி ஆசிரியராகப் பணிபுரியும் அவரது மனைவி மற்றும் 12, 9, 8 வயதுடைய மூன்று பிள்ளைகளுக்கும் விசா நீடிப்பு மறுக்கப்பட்டுள்ளது.
“நாங்கள் எல்லாவற்றையும் சட்டப்பூர்வமாகவே செய்தோம். நான் விசா காலம் முடிந்து தங்கியிருப்பவன் அல்ல. எனது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவே நான் இங்கு வந்தேன். எனது பிள்ளைகள் நன்றாகப் படிக்கிறார்கள், எனது கடைசிப் பிள்ளைக்கு ஆங்கிலம் மட்டுமே பேசவும் எழுதவும் தெரியும். இச்சம்பவத்தை இன்னும் பிள்ளைகளிடம் சொல்லவில்லை, என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பியிருக்கிறோம்” என ரசிக தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்த பராமரிப்புப் பணியாளர்கள் பிரித்தானியாவில் நிரந்தரக் குடியுரிமை பெறுவதற்கான கால எல்லையை 5 வருடங்களிலிருந்து 15 வருடங்களாக நீடிப்பதற்கான புதிய முன்மொழிவுகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Tulia Group CIC நடத்திய ஆய்வில், 15 வருடக் கொள்கை அமுல்படுத்தப்பட்டால் 36 வீத ஊழியர்கள் மட்டுமே நாட்டில் தங்கியிருக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.
Lifted தளம் நடத்திய ஆய்வில், 69 வீத பணியாளர்கள் நாட்டை விட்டு வெளியேற ஆலோசிப்பதாகக் கூறியுள்ளனர்.
தற்போதுள்ள வெளிநாட்டுப் பராமரிப்புப் பணியாளர்கள் வாரம் ஒன்றுக்கு 4.2 மில்லியன் மணித்தியாலங்கள் தங்களது சேவையை வழங்கி, சுமார் 280,000 பாதிக்கப்படக்கூடிய மக்களுக்குப் பராமரிப்பு வழங்கி வருகின்றனர். இந்த விதிகளால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறினால் பிரித்தானியாவின் சமூகப் பராமரிப்புத் துறை கடுமையான வீழ்ச்சியைச் சந்திக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
MTC Solicitors நிறுவனத்தின் நாகா கந்தையா,
“புலம்பெயர் பராமரிப்புப் பணியாளர்கள் தங்களது அத்தியாவசியப் பணியைத் தொடர வேண்டுமா அல்லது பிள்ளைகளைப் பிரிந்து வாழ வேண்டுமா என்ற இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சமூகத்திலுள்ள ஏனைய பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பராமரிக்கும் இவர்களுக்கு, தங்களது சொந்தக் குடும்பத்தைப் பராமரிக்கும் உரிமை மறுக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
Migrants’ Rights Network அமைப்பின் தலைமை நிர்வாகி பிஸா குரேஷி,
“சிறுமிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த ‘வீட்டுக்கு போ’ உத்தரவு கண்டிக்கத்தக்கது. நமது சுகாதார மற்றும் பராமரிப்புத் துறையின் அடித்தளமாக விளங்கும் புலம்பெயர் தொழிலாளர்களை அரசாங்கம் இன்னும் மரியாதையுடனும், இரக்கத்துடனும் நடத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துள்ள உள்துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர்,
“நாட்டிற்குப் பங்களிப்பு வழங்கி சிறந்த வாழ்க்கையைக் கட்டியெழுப்ப விரும்புபவர்களை நாங்கள் எப்போதும் வரவேற்கிறோம். ஆனால் எங்களது எல்லைக் கட்டுப்பாடுகளை நாங்கள் முறைப்படுத்த வேண்டும். முந்தைய அரசாங்கத்தின் கீழ் ஏற்பட்ட முன்னோடியில்லாத புலம்பெயர்வு சவால்களை எதிர்கொள்ளும் வகையில், இந்தத் தலைமுறையின் மிகப்பெரிய விசா சீர்திருத்தங்களை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். பிரித்தானியாவில் குடியேறுவது என்பது ஒரு சலுகை மட்டுமே, அது உரிமை அல்ல. விதிகளைப் பின்பற்றி பங்களிப்பு வழங்குபவர்கள் அதனைப் பெற்றுக்கொள்ளலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.