உலகளாவிய ரீதியில் கோப்பி விலை உயர்வடைந்து செல்வதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானியாவின் லண்டன் நகரில் ஒரு கோப்பை கோப்பியின் விலை 4 பவுண்டுகளைத் தாண்டியுள்ளது.
அதே நேரத்தில் அமெரிக்காவின் ‘ஸ்டார்பக்ஸ்’ (Starbucks) போன்ற முன்னணி நிறுவனங்களும் தங்களது கோப்பி விலையை உயர்த்தி வருகின்றன.
கோப்பி விநியோகச் சங்கிலியின் (Supply Chain) ஒவ்வொரு கட்டத்திலும் செலவுகள் அதிகரித்துள்ளதே இதற்கு முக்கிய காரணம் என அந்த நிறுவனங்கள் நியாயப்படுத்த முயல்கின்றன.
கோப்பி உற்பத்தியில் உலகின் முன்னணி நாடான வியட்நாமில், கடந்த 2024 ஆம் ஆண்டின் முற்பகுதியில் கடுமையான வறட்சி ஏற்பட்டது. மேலும், அவ்வாண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக கோப்பி பயிர்ச்செய்கைகள் பெருமளவில் சேதமடைந்தன.
இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்த புதிய வரி விதிப்புக் கொள்கைகள் (Tariffs) காரணமாக, கோப்பி உற்பத்தி செய்யும் முக்கிய நாடுகளான வியட்நாம் (46%), இந்தோனேசியா (32%) மற்றும் பிரேசில் (50%) ஆகிய நாடுகளுக்கு கடுமையான வரிச்சுமை ஏற்பட்டது.
இதன்காரணமாக, அமெரிக்காவிற்கான பிரேசிலின் கோப்பி ஏற்றுமதி பாதியாகக் குறைந்தது.
அமெரிக்க இறக்குமதியாளர்கள் வரி குறைந்த நாடுகளிலிருந்து கோப்பியை இறக்குமதி செய்ய ஆரம்பித்தமையால் , அந்த நாடுகளிலும் கோப்பியின் விலை கணிசமாக உயர்ந்தது.
இந்த வரி விதிப்புகளால் அமெரிக்க சந்தையில் கோப்பியின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்சத்தை தொட்டது. இதனால் பாதிக்கப்பட்ட நுகர்வோரின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில், கடந்த நவம்பர் மாதம் டிரம்ப், கோப்பி உள்ளிட்ட சில உணவுப் பொருட்களுக்கு இந்த வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கும் நிர்வாக உத்தரவொன்றைப் பிறப்பிக்க வேண்டியதாயிற்று.
இருப்பினும், கோப்பி விலை எவ்வளவு உயர்ந்தாலும் நுகர்வோர் காபி வாங்குவதைக் குறைத்துக் கொள்ளவில்லை என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறிப்பாக, இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் ‘கோல்ட் புரூஸ்’ (Cold Brews) போன்ற நவீன ரக கோப்பி வகைகள் பிரபலமடைந்து வருவதால், உலக சந்தையில் கோப்பிக்கான தேவை எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்து அதிகரித்தே வருவதாக சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.