ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கடல்சார் கப்பல் போக்குவரத்தை எளிதாக்குவதற்கு ஈரான் “முழுமையாகத் தயாராக” இருப்பதாக அந்த நாட்டு ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன், ஜப்பானிய பிரதமர் சனாயே தகா இச்சியிடம் (Sanae Takaichi) தெரிவித்துள்ளார்.
குறித்த கடல்வழிப் பாதையை மீண்டும் திறக்குமாறு ஜப்பானிய பிரதமர் தகா இச்சி விடுத்த வேண்டுகோளையடுத்து, இரு தலைவர்களுக்கும் இடையே இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதே அதிபர் பெசெஷ்கியன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“ஈரானிய கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தகத்திற்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள தடைகளும் தடங்கல்களுமே தற்போதைய முதன்மையான பிரச்சினையாகும்” என அதிபர் பெசெஷ்கியன் கூறியதாக ஈரானின் உத்தியோகபூர்வ ஐ.ஆர்.என்.ஏ (IRNA) செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
அவர் மேலும் கூறுகையில், “ஜப்பானிய கப்பல்கள் எந்தவிதப் பிரச்சினைகளும் இன்றி, மிகவும் இலகுவாகக் கடந்து செல்வதற்கான வழித்தடத்தை வழங்க நாங்கள் முயற்சிப்போம்” என்றும் உறுதியளித்துள்ளார்.