மீட்பு, மறுசீரமைப்பு மற்றும் திவால்தன்மை (நிறுவன மற்றும் தனிநபர்) சட்டமூலத்திற்கு நாடாளுமன்ற சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று புதன்கிழமை அங்கீகாரச் சான்றிதழை வழங்கியதையடுத்து அது உத்தியோகபூர்வமாக சட்டமாகியுள்ளது.
குறித்த சட்டமூலம் 2026 மார்ச் 17ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முதன்முறையாக சமர்ப்பிக்கப்பட்டதுடன், 2026 மே 6ஆம் திகதி நடைபெற்ற விவாதத்தின் பின்னர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
புதிய சட்டத்தின் மூலம் மீட்பு, மறுசீரமைப்பு மற்றும் திவால்தன்மைச் சட்டம், நிறுவனங்கள் சட்டம் (2007), உள்நாட்டு இறைவரிச் சட்டம் (2017) மற்றும் மத்தியஸ்த சபைகள் சட்டம் (1988) ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அதேவேளை, தற்போதுள்ள திவால்தன்மை கட்டளைச் சட்டமும் இரத்து செய்யப்படுகிறது.
இந்தச் சட்டம் தனிநபர் திவால்தன்மை தொடர்பான புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்துவதுடன், கடன் பாதுகாப்பு, கடன் செலுத்தல் ஒத்திவைப்பு மற்றும் கடன் மறுசீரமைப்பு போன்ற விடயங்களுக்கும் சட்டப் பாதுகாப்பை வழங்குகிறது. மேலும், கடனாளிகளின் அத்தியாவசிய சொத்துக்கள் மற்றும் நியாயமான வருமானத்தைப் பாதுகாக்கும் ஏற்பாடுகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அதேநேரம், நிறுவன ஆளுகை, பெறுநர் நிர்வாகம் மற்றும் எல்லைத் தாண்டிய திவால்தன்மை தொடர்பான விடயங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதால், கடன் சந்தையில் நம்பிக்கையையும் முன்னறிவிப்புத் தன்மையையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.