மட்டக்களப்பில் தங்க நகையை கொள்ளையிடுவதற்காக மயக்க மருந்து கொடுக்கப்பட்ட வயோதிய பெண் 8 மாதங்களின் பின்னர் நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கல்லாறு பிரதேசத்தைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை விஜயலட்சுமி (வயது 65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த மார்ச் 20 ம் திகதி கொக்கட்டிச்சோலை நெல்லிகாடு வயல் பகுதியில் பாழடைந்த கிணற்றில் உயிருடன் போராடிக் கொண்டிருந்த இளம் தாய் ஒருவர் மீட்கப்பட்டதுடன் அதே கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.
இச்சம்பவத்தில் வவுணதீவு பாவகொடிச்சேனையைச் சேர்ந்த கணவன் மனைவி ஆகிய இருவரும் பிரதான சூத்திரதாரிகளாக அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கணவனும் மனைவியும் கடந்த பெப்பிரவரி 4ம் திகதி மட்டக்களப்பு பிரதான பேருந்து தரிப்பு நிலையத்துக்கு சென்று அங்கு வவுணதீவு பாவக்கொடிச்சேனைக்கு தனது மகளிடம் செல்வதற்காக பேருந்திற்காக காத்திருந்த வயோதிப பெண்ணுக்கு மனநிலை பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்படும் தூக்க மாத்திரைகளை குளிர்பானத்தில் கலந்து குடிக்க கொடுத்து அவர் மயங்கியவுடன் அவரிடமிருந்த பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றனர்.
ஏற்கனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த வயோதிப பெண் இச்சம்பவத்தை தொடர்ந்து அவரது உடல்நிலை மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டு சிறுநீரகமும் பாதிக்கட்ட நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இவ்வாறு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
கொள்ளையர்கள் கொடுத்த மயக்க மருந்தின் தாக்கத்தினாலேயே அவர் இவ்வாறு நோய்வாய்ப்பட்டு உயிரிழந்ததாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்










