மட்டக்களப்பு-ஏறாவூரில் உணவக உரிமையாளர் ஒருவர், பொது சுகாதார பரிசோதகரை பழிவாங்கும் நோக்கில், அவர் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளில் போதைப்பொருளை மறைத்து வைக்க முயன்ற சம்பவம் தொடர்பாக, நேற்று வெள்ளிக்கிழமை இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
செங்கலடி பொது சுகாதார பணிமனையின் கீழ் உள்ள, ஏறாவூர் 4 ம் பிரிவு பிரதேசத்தில் கடமையாற்றி வரும் பொது சுகாதார பரிசோதகர், அந்த பகுதியில் உள்ள உணவகங்களின் சுகாதாரம் தொடர்பாக பரிசோதித்து வந்துள்ளார்.
இதன் போது, சுகாதாரமற்ற உணவகம் ஒன்றுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார்.
குறித்த சுகாதார பரிசோதகர் மீது கோபம் கொண்ட குறித்த உணவகத்தின் உரிமையாளர், அவரை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில், இருவருக்கு பணம் வழங்கி குறித்த சுகாதார பரிசோதகரின் மோட்டார் சைக்கிளில் போதைப்பொருளை வைக்குமாறு தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், உணவக உரிமையாளரிடமிருந்து பணம் பெற்ற இருவரும், சம்பவ தினமான கடந்த 26-ம் திகதி, ஏறாவூர் 4ம் பிரிவிலுள்ள பாடசாலை வீதியில் உள்ள கிளினிக் நிலையத்துடன் இருக்கும் சுகாதார பரிசோதகரின் காரியாலயத்தின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில், ஜஸ் போதைப் பொருள் கொண்ட 3 பக்கற்றுக்களை ஒளித்து வைத்துள்ளனர்.
அதன் பின், தனது மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமான பொருள் இருப்பதை அவதானித்த பொதுச்சுகாதார பரிசோதகர், உடனடியாக இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், மோட்டார் சைக்கிளில் இருந்த பொதியினுள் ஐஸ் போதைப்பொருள் இருப்பதை கண்டறிந்தனர். அதன்பின்னர சிசிரிவி கமராவை ஆராய்ந்ததில், இருவர் வந்து மோட்டார் சைக்கிளில் போதைப்பொருளை மறைத்து வைத்தமை கண்டு பிடிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இதன்போது ஏறாவூர் மீராகேணியைச் சேர்ந்த 46 வயதுடைய மற்றும் ஏறாவூர் 6ம் பிரிவைச் சேர்ந்த 32 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டனர்.
பொலிஸாரின் விசாரணையில், உணவக உரிமையாளர் தங்களுக்கு பணம் வழங்கி இவ்வாறு செய்யும்படி தெரிவித்ததாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை ஏறாவூர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (படம் AI Generated)










