பாடநெறிகளில் கலந்துகொள்ளாத ஒருவருக்கு சான்றிதழ்களை வழங்குவதற்காக பணம் பெற்றதாகக் கூறப்படும், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் (NYSC) அதிகாரி ஒருவரை, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) கைது செய்துள்ளது.
குறித்த நபர் சம்பந்தப்பட்ட பாடநெறிகளில் கலந்துகொள்ளாத போதிலும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கிலப் பாடநெறிகளை நிறைவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டு, இரண்டு சான்றிதழ்களை வழங்கியதாகவும், அதற்காக முறைப்பாட்டாளரிடமிருந்து ஆரம்பத்தில் 6,500 ரூபாய் பெற்றதாகவும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, முறைப்பாட்டாளர் தமிழ் மொழிப் பாடநெறியை நிறைவு செய்துள்ளதாகக் குறிப்பிடும் மற்றுமொரு சான்றிதழை வழங்குவதற்காக 4,000 ரூபாய் கோரியதாகவும் சந்தேகநபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பின்னர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக தமிழ் மொழிப் பாடநெறிக்கான சான்றிதழை வழங்குவதற்காக மேலும் 6,500 ரூபாயை கோரி பெற்றதாகவும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் படியத்தலாவை தொழிற்பயிற்சி நிலையத்தில் நேற்று புதன்கிழமை பிற்பகல் சுமார் 1.35 மணியளவில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மகியங்கனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.










