இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் (SLC) உயர்மட்ட நிர்வாகத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளதுடன், முன்மொழியப்பட்டுள்ள புதிய நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் ஊழியர்களின் செயல்திறன் கடுமையான இலக்குகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும் என இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவின் தலைவர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், புதிய கட்டமைப்பின் மூலம் ஊழியர்கள் மற்றும் உயர்மட்ட நிர்வாகத்தினருக்கான பொறுப்புகள் தெளிவுபடுத்தப்படுவதுடன், முக்கிய செயல்திறன் குறிகாட்டிகள் (KPIs) அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
“மாற்றங்கள் ஏற்படும். ஏனெனில் மாற்றங்கள் தேவை” என தெரிவித்த எரான் விக்கிரமரத்ன, ஊழியர்களின் செயல்திறன் நெருக்கமாக மதிப்பீடு செய்யப்படுவதால் இந்த மாற்றக் காலம் சவாலானதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மறுசீரமைப்புக் குழு உறுப்பினர் தினால் பிலிப்ஸ், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பல்வேறு பதவிகளுக்கு மிகவும் பொருத்தமானவர்களைத் தெரிவு செய்வதற்காக நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
செயல்திறனைப் பொறுத்து சில நியமனங்கள் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படலாம் எனவும், ஊழியர்கள் கடுமையான செயல்திறன் மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
முன்மொழியப்பட்டுள்ள புதிய கட்டமைப்பின் கீழ் நிறுவனத்தின் அன்றாட நிர்வாகப் பணிகளுக்கு பிரதம நிறைவேற்று அதிகாரி பொறுப்பேற்பார் எனவும், கிரிக்கெட் சபை கொள்கை வகுத்தல் மற்றும் மேற்பார்வை நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் எனவும் தினால் பிலிப்ஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மேம்படுத்துதல், நிதி நிர்வாகத்தில் பொறுப்புக்கூறலை வலுப்படுத்துதல் மற்றும் தொழில்முறை நிர்வாகத்தை ஏற்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு குழு செயற்பட்டு வருவதாக எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.
சுமார் 16 பில்லியன் ரூபாய் பெறுமதியான நிறுவனமாக இலங்கை கிரிக்கெட் காணப்படுவதால், அதில் வலுவான கண்காணிப்பு மற்றும் சமநிலையான கட்டுப்பாட்டு முறைமைகள் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் தொடர்பான வரைவு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, பொதுமக்களின் பரிசீலனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர், அதற்கான விதிமுறைகள் மற்றும் ஒழுங்குவிதிகள் தயாரிக்கப்பட்டதைத் தொடர்ந்து புதிய கட்டமைப்பின் கீழ் தேர்தல்கள் நடத்தப்படலாம் எனவும், இந்த நடைமுறைக்கு பல மாதங்கள் ஆகக்கூடும் எனவும் குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.










