அதிக வரிச்சுமை காரணமாக நாட்டின் திறமையான பணியாளர்கள் தொடர்ந்து வெளிநாடுகளுக்குச் செல்வதாகத் தெரிவித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA), வைத்தியர்கள் உள்ளிட்ட தொழில்முறையாளர்களுக்கு மேலதிக வரிச்சலுகைகளை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
2021/2022ஆம் ஆண்டிலிருந்து 2,500க்கும் மேற்பட்ட விசேட வைத்தியர்கள் மற்றும் ஏனைய மருத்துவ அதிகாரிகள் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளதாகவும், அவர்களின் வெளிநாட்டு இடம்பெயர்வுக்கு வரிச்சுமையும் முக்கிய காரணிகளில் ஒன்றாக அமைந்துள்ளதாகவும், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து அரசாங்க வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் 2023 ஜனவரி முதல் அறிமுகப்படுத்தப்பட்ட வரி சீர்திருத்தங்களால் தொழில்முறையாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
தனிநபர் வருமான வரிக் கட்டமைப்பில் பின்னர் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதை ஏற்றுக்கொண்டுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், பணவீக்கம், வாழ்க்கைச் செலவு, போக்குவரத்துச் செலவுகள் உள்ளிட்ட பொருளாதார அழுத்தங்களுடன் ஒப்பிடுகையில் வழங்கப்பட்ட வரிச்சலுகை போதுமானதாக இல்லை என தெரிவித்துள்ளது.
சில தொழில்முறையாளர்கள் தங்களது வருமானத்தில் சுமார் 36 சதவீதம் வரை நேரடி வரியாக செலுத்துவதுடன், கணிசமான மறைமுக வரிச்சுமையையும் ஏற்க வேண்டியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
வைத்தியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான நீண்டகாலப் பிரச்சினைகளையும் அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. சில கொடுப்பனவுகள் பல ஆண்டுகளாகத் திருத்தப்படாமல் இருப்பதுடன், மேலதிக கடமை மற்றும் விடுமுறை நாட்களில் பணியாற்றுவதற்கான சில கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார நிலைமை தற்போது மேம்பட்டு வருவதால், அரசாங்கத்தின் ஒட்டுமொத்த வருமானத்தை பாதிக்காமல் மேலதிக வரித் திருத்தங்களை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பு இருப்பதாக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் வரி வருமானம் 5.4 டிரில்லியன் ரூபாயைத் தாண்டியுள்ளதாகவும், 2025ஆம் ஆண்டில் சேகரிக்கப்பட்ட வரி வருமானம் எதிர்பார்க்கப்பட்ட அளவை விட 30 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்ததாகவும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் வரவு–செலவுத் திட்டத்தை முன்னிட்டு, வரி விலக்கு வரம்பு, வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி வரம்புகளில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் ஒட்டுமொத்த வரி வருமானத்தைப் பேணிக்கொண்டே வைத்தியர்கள் உள்ளிட்ட தொழில்முறையாளர்களுக்கு அதிக நிவாரணம் வழங்கும் வகையிலான வரிக் கட்டமைப்பை அறிமுகப்படுத்துமாறும் அந்தச் சங்கம் கோரியுள்ளது.
உயர் திறன்கொண்ட தொழில்முறையாளர்களை நாட்டில் தக்கவைத்துக்கொள்ளத் தவறினால், இலங்கைக்கு நீண்டகால பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனவும், அறிவுசார் மற்றும் தொழில்முறை திறமைகளை நாடு மேலும் இழக்க நேரிடும் எனவும், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.










