ஆரம்பக் குழந்தைப் பருவக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், அறிவியல் அடிப்படையிலான புதிய பாலர் கல்விப் பாடத்திட்டத்தை இலங்கை அறிமுகப்படுத்தியுள்ளது.
பெண்கள் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், குழந்தைகளின் வாழ்க்கையின் முதல் சில ஆண்டுகளே கற்றல், நடத்தை மற்றும் உணர்ச்சி வளர்ச்சிக்கான மிக முக்கியமான காலப்பகுதியாகும் என்பதை அறிவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பக் குழந்தைப் பருவத்தில் ஒரு குழந்தையின் மூளையில் ஒவ்வொரு நொடியும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான புதிய நரம்பணுக்கள் உருவாகின்றன. எனவே, இது மனித வளர்ச்சியின் மிக முக்கிய கட்டமாகக் கருதப்படுவதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த காலகட்டத்தில் ஏற்படும் எதிர்மறையான அனுபவங்கள் மற்றும் மன அழுத்தங்கள், வாழ்நாள் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதுடன், எதிர்காலத்தில் உடல் மற்றும் மனநலப் பிரச்சினைகளுக்கான அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும் என அரசாங்கம் எச்சரித்துள்ளது.
தற்போதைய பாலர் கல்வி முறை, எழுத்துக்கள், எண்கள், மொழி மற்றும் கணிதம் ஆகியவற்றைக் கற்பிப்பதில் அதிக கவனம் செலுத்துகின்ற நிலையில், குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு அவசியமான விளையாட்டு மற்றும் செயற்பாட்டு அடிப்படையிலான கற்றலுக்கு போதிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில், பெண்கள் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு, கல்வி அமைச்சு மற்றும் யூனிசெப் இணைந்து 2025 நவம்பரில் ஆரம்பக் குழந்தைப் பருவக் கல்விக்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை அறிமுகப்படுத்தின.
கல்வி, சுகாதாரம், சிறுவர் நலன் மற்றும் சிறுவர் பாதுகாப்புத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பயிற்றுவிப்பாளர்களுக்கான தேசிய மட்டப் பயிற்சி நிகழ்ச்சிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவியல் தரநிலைகளுக்கு ஏற்ப, குழந்தை நட்பு கற்றல் சூழலை உருவாக்குவதோடு பாலர் கல்வியின் தரத்தையும் மேம்படுத்த இந்தப் புதிய மாற்றங்கள் உதவும் என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.