HSBC குளோபல் சேர்வீஸ் சென்டர் தனது செயற்பாடுகளை இலங்கையிலிருந்து பிலிப்பைன்ஸுக்கு மாற்றக்கூடும் என வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கவலை வெளியிட்டுள்ளார். இந்த நடவடிக்கை உறுதிப்படுத்தப்பட்டால், இலங்கையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 3,500 வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படுவதுடன், நாட்டின் பொருளாதாரத்துக்கும் பின்னடைவு ஏற்படக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.
‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், HSBC குளோபல் சேர்வீஸ் சென்டர் 2027 டிசெம்பர் மாதத்துக்குள் இலங்கையிலிருந்து வெளியேறக்கூடும் எனத் தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதனால் சுமார் 3,000 நேரடி வேலைவாய்ப்புகளும் 500 மறைமுக வேலைவாய்ப்புகளும் இழக்கப்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்தத் தகவல் தவறானதாக இருக்க வேண்டும் எனத் தாம் நம்புவதாகத் தெரிவித்த அவர், இத்தகைய வெளியேற்றம் உறுதிப்படுத்தப்பட்டால் நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.
இலங்கையின் முதலீட்டுச் சூழல் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ள சஜித் பிரேமதாச, வெளிநாட்டு நேரடி முதலீடுகளை (FDI) அதிகளவில் ஈர்க்க வேண்டிய நிலையில், முக்கிய வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டிலிருந்து வெளியேறும் நிலைமை காணப்படுவது கவலைக்குரியது எனத் தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுகத்தில் 392 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியில் முன்மொழியப்பட்டிருந்த தளவாட மையத் திட்டத்திலிருந்து சீனாவின் சைனா மெர்ச்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் விலகியுள்ள பின்னணியிலேயே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
தெற்காசிய வர்த்தக மற்றும் தளவாட மையத் திட்டத்தை (SACLH) கைவிடுவதாக சைனா மெர்ச்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம், 2026 ஒக்டோபர் 15ஆம் திகதி ஹொங்கொங் பங்குச் சந்தைக்குச் சமர்ப்பித்த அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது. 50 ஆண்டுகால கட்டியமைத்தல், இயக்குதல் மற்றும் பின்னர் ஒப்படைத்தல் (BOT) ஒப்பந்தத்தின் கீழ் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவிருந்தது. தெற்காசியாவின் மிகப்பெரிய தளவாட வளாகங்களில் ஒன்றாக இதனை உருவாக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. இத்திட்டத்தில் சைனா மெர்ச்சன்ட்ஸ் போர்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான Fortune Centre Group Limited ஊடாக 70 சதவீத பங்குகளும், இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் Access Engineering PLC ஆகியவற்றிடம் தலா 15 சதவீத பங்குகளும் காணப்பட்டன.
வெளிப்புறச் சூழ்நிலைகளில் ஏற்பட்ட மாற்றங்கள், திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் வர்த்தக ரீதியான காரணங்களால் திட்டம் கைவிடப்பட்டதாக அந்நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தீர்வொப்பந்தத்தின் ஒரு பகுதியாக திட்ட நிறுவனத்துக்கு 21.905 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலுத்த இலங்கை துறைமுக அதிகாரசபை இணங்கியுள்ளது. ஐந்து மாடிகளைக் கொண்டதாக முன்மொழியப்பட்டிருந்த இந்தத் தளவாட வளாகத்துக்கு 2023 டிசெம்பரில் மூலோபாய அபிவிருத்தித் திட்ட அந்தஸ்து வழங்கப்பட்டதுடன், முதலீட்டை ஊக்குவிப்பதற்காகப் பல்வேறு வரிச் சலுகைகளும் அறிவிக்கப்பட்டிருந்தன.
எனினும், திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதங்கள், காணி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் ஒழுங்குமுறைச் சிக்கல்கள் காரணமாக எதிர்பார்த்தபடி பணிகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில், குறித்த காணியில் புதிய முதலீட்டுத் திட்டங்களைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை இலங்கை துறைமுக அதிகாரசபை முன்னெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், HSBC நிறுவனம் இலங்கையிலிருந்து வெளியேறக்கூடும் என்ற தகவல் உறுதிப்படுத்தப்பட்டால், வேலைவாய்ப்புகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பில் அதன் தாக்கம் குறித்து கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.










