நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் தலைமையிலான புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது உத்தியோகபூர்வ ஆதரவை வழங்கியுள்ளது.
இது தொடர்பான ஆதரவுக் கடிதத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவிடம் நேரில் கையளித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்திருந்த போதிலும், ஆட்சியமைப்பதற்குத் தேவையான அறுதிப் பெரும்பான்மையைப் பெறுவதில் இழுபறி நிலை நீடித்து வந்தது.
இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இந்த உத்தியோகபூர்வ ஆதரவு கடிதம் மூலம், தமிழக வெற்றிக் கழக கூட்டணிக்குத் தேவையான 118 என்ற பெரும்பான்மை எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் நிலவி வந்த அரசியல் நிச்சயமற்ற தன்மை முடிவுக்கு வந்துள்ளதுடன், விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பதற்கான உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் இனி விரைவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழக வெற்றிக் கழகம் 107 , காங்கிரஸ் கட்சி 5 , சிபிஐ , சிபிஎம் ஆகிய கட்சிகள் 4 , மற்றும் விசிக 2 என மொத்தமாக 118 சாதாரண பெரும்பான்மை பெற்று தமிழக வெற்றிக் கழகம் தமிழகத்தில் ஆட்சியமைக்கிறது.
இந்தச் சந்திப்பின் போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.