சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) கட்சி அமைப்பு மற்றும் உள்கட்சி ஒழுக்கம் தொடர்பான அனுபவங்களை மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொள்வதற்காக அக்கட்சியின் பிரதிநிதிகள் குழுவொன்று விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பான முன்மொழியப்பட்ட விஜயம் குறித்து, ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவுக்கும் இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங்கிற்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை பெலவத்தையில் அமைந்துள்ள ஜே.வி.பி தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் 29ஆம் திகதி சீனாவில் நடைபெற்ற சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய குழுவின் ஐந்தாவது முழுமையான அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் இந்தச் சந்திப்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாக டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்போது, கட்சிக்குள் கடுமையான ஒழுக்கத்தைப் பேணுதல் மற்றும் கட்சி அமைப்புக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துதல் தொடர்பில் சீன கம்யூனிஸ்ட் கட்சி பின்பற்றும் அணுகுமுறைகள் குறித்து சீனத் தூதுவர் விளக்கமளித்துள்ளார்.
இந்தக் கொள்கைகள் தொடர்பில் மேலதிக விளக்கங்களை வழங்குவதற்கும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனுபவங்களை ஜே.வி.பி உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கும் அக்கட்சியின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக டில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பிலும் இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர்.
குறிப்பாக முதலீடு, தொழில்நுட்பம், போக்குவரத்து, கல்வி, சுகாதாரம் மற்றும் கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தத் துறைகளில் இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதற்கான சீனாவின் உறுதிப்பாட்டைத் தூதுவர் வெய் மீண்டும் உறுதிப்படுத்தியதாக டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்திக்கு சீனா வழங்கிவரும் உதவிகளுக்கு நன்றியைத் தெரிவித்த டில்வின் சில்வா, மக்கள் விடுதலை முன்னணிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான நீண்டகால உறவையும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தச் சந்திப்பில் சீனத் தூதரகத்தின் ஆலோசகர் மேய் ஜிங், அரசியல் பிரிவின் தலைவர் கின் லிகொங், இரண்டாம் செயலாளர் ஜின் என்ஸே மற்றும் அதிகாரி லி ஜியானி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.










