எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட ஐந்து சிறப்புரிமைக் கோரிக்கைகளும் நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டமைக்கான அடிப்படை ஆதாரங்களை கொண்டிருக்கவில்லை எனத் தெரிவித்து நிராகரிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ் இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, மனோ கணேசன், முஜிபுர் ரஹ்மான், சாணக மாதுகொட ஆகியோரால் இந்தக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்ததாக சபாநாயகரின் அறிவிப்பைச் சபையில் வாசித்த பிரதி சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் மற்றும் 1953ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க நாடாளுமன்ற (அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள்) சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் குறித்த கோரிக்கைகள் ஆராயப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது, நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 118இன் கீழ் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும் வகையில், நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டமைக்கான ஆரம்பகட்ட ஆதாரங்கள் எவையும் குறித்த கோரிக்கைகளில் காணப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்ற நடைமுறைகள், நிகழ்ச்சி நிரலில் விடயங்களை உள்ளடக்குதல் மற்றும் நாடாளுமன்ற அமர்வுகளுக்கான கால அட்டவணையைத் தீர்மானித்தல் போன்றவை நடைமுறை சார்ந்த விடயங்களாகும். அவற்றை நாடாளுமன்ற சிறப்புரிமை மீறல்களாகக் கருத முடியாது என்றும் பிரதி சபாநாயகர் விளக்கமளித்துள்ளார்.
மேலும், கடந்த ஒக்டோபர் 06ஆம் திகதி சபாநாயகர் வழங்கிய தீர்ப்பையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான நிர்வாகத் தீர்மானங்கள் மற்றும் விவாதங்களுக்கான நேர ஒதுக்கீடு ஆகியவற்றை சிறப்புரிமைக் கேள்விகள் மூலம் சவாலுக்கு உட்படுத்த முடியாது என அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சபாநாயகருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதி சபாநாயகர், நீதிமன்ற விசாரணையில் உள்ள விடயங்களை (Sub judice) நீக்கி திருத்தப்பட்ட பிரேரணையைச் சமர்ப்பிப்பதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் குழு சந்தர்ப்பம் வழங்கியிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் திருத்தப்பட்ட பிரேரணை சமர்ப்பிக்கப்படாததால், ஏற்கனவே முன்வைக்கப்பட்ட அசல் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாய உரிமை எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், முன்வைக்கப்பட்ட விடயங்கள் நாடாளுமன்ற (அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள்) சட்டத்தின் கீழ் குற்றங்களாகவும் அமையவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய, நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 118இன் கீழ் சிறப்புரிமைக் கேள்விகளை எழுப்புவதற்கான நிபந்தனைகளை ஐந்து கோரிக்கைகளும் பூர்த்தி செய்யவில்லை என்பதால், அவற்றைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு எவ்வித அடிப்படையும் இல்லை என பிரதி சபாநாயகர் சபைக்கு அறிவித்துள்ளார்.
இந்த வாரத்தின் ஆரம்பத்தில், சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையாளப்பட்ட விதம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் சிறப்புரிமைக் கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
இதன்போது, குறித்த ஐந்து கோரிக்கைகளும் ஆராயப்பட்ட பின்னர் அவற்றுக்கான தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படும் என பிரதி சபாநாயகர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.










