போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 70 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சந்தேகத்திற்கிடமான வங்கிப் பரிவர்த்தனைகள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் 49 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை பொலிஸாரின் தகவலின்படி, சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின்போது, பிலியந்தலையில் அமைந்துள்ள இரண்டு தனியார் வங்கிகளில் குறித்த பெண் பராமரித்து வந்த நான்கு வங்கிக் கணக்குகள் கண்டறியப்பட்டுள்ளன.
குறித்த வங்கிக் கணக்குகள் ஊடாக 70 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர்களால் இந்தப் பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் உள்ளிட்ட ஐந்து பேர் தொடர்புடைய மற்றுமொரு பணமோசடி விசாரணையில் சந்தேகநபராக உள்ள ஒருவரின் சகோதரியே கைது செய்யப்பட்ட பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மடபாத்த பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண், நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.










