பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்படும் பௌத்த பிக்குகள் தொடர்ந்து காவியுடை அணிய அனுமதிக்கப்பட வேண்டுமா என்பதைச் சிறை அதிகாரிகள் தீர்மானிப்பதற்குப் பதிலாக, சம்பந்தப்பட்ட பிக்குகள் சார்ந்த நிகாயங்களே (பிரிவுகள் அல்லது சங்க அமைப்புகம்) தீர்மானிக்க வேண்டும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், இவ்வாறான சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட நிகாயங்களுடன் கலந்தாலோசிக்கும் நடைமுறையொன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவமொன்று இடம்பெற்றால், சம்பந்தப்பட்ட நிகாயத்துக்கு அறிவிப்பதுடன், பௌத்த விவகார ஆணையாளர் ஊடாக மூன்று நிகாயங்களையும் சேர்ந்த நான்கு மகாநாயக்க தேரர்களிடம் வழிகாட்டல்களைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் விளக்கமளித்தார்.
“சிறையில் அடைக்கப்பட்டுள்ள பௌத்த பிக்கு ஒருவர் தொடர்ந்து காவியுடை அணிய வேண்டுமா, இல்லையா என்பதைச் சிறை அதிகாரிகள் தீர்மானிக்கக் கூடாது என்பதே எமது நிலைப்பாடு. அந்தப் பிக்கு சார்ந்த நிகாயமே அது தொடர்பான தீர்மானத்தை எடுக்க வேண்டும்” என அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, கலகொட அத்தே ஞானசார தேரர் சிறையில் இருந்தபோது அவரது காவியுடை தொடர்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கும் அமைச்சர் ஜயதிஸ்ஸ பதிலளித்தார்.
நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த கம்மன்பில, ஞானசார தேரரின் காவியுடை அகற்றப்படுவதை அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் பார்ப்பதற்கு சிறை அதிகாரி ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தி ஏற்பாடு செய்ததாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ஜயதிஸ்ஸ, இந்த விவகாரம் மிகவும் பாரதூரமானது என்றும், இதனைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.
இது தொடர்பில் இலங்கைப் பொலிஸாரிடம் சிறைச்சாலைகள் திணைக்களம் முறைப்பாடு செய்த பின்னர், கம்மன்பில முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறான சம்பவமொன்று உண்மையில் இடம்பெற்றதா, அவ்வாறு இடம்பெற்றிருந்தால் அது எவ்வாறு நடந்தது என்பதைக் கண்டறிவதே விசாரணையின் நோக்கம் என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், விசாரணையின்போது தாம் நேரில் பார்த்த, கேட்ட அல்லது பிறரிடமிருந்து அறிந்துகொண்ட சம்பவம் தொடர்பான அனைத்து தகவல்களையும் கம்மன்பில வெளிப்படுத்துவார் என எதிர்பார்ப்பதாகவும், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறினார்.










