அரசாங்கத்தின் ‘பிரஜா சக்தி’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், ஒரே நேரத்தில் சுமார் 150 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய புதிய பயணிகள் படகு நெடுந்தீவு – யாழ்ப்பாணம் கடல் மார்க்கத்தில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் கடல் வழிப் பயணிகள் போக்குவரத்தில் நிலவும் சிரமங்களுக்கு தீர்வு காணும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. குறிப்பாக, பிரதான நிலப்பரப்புக்கும் நெடுந்தீவு உள்ளிட்ட தீவுப் பகுதிகளுக்கும் இடையிலான கடல் போக்குவரத்தை மேம்படுத்துவது இதன் நோக்கமாகும்.
தற்போது காணப்படும் வசதிகள் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான பயணிகளை பாதுகாப்பாக ஏற்றிச் செல்ல போதுமானதாக இல்லாததால், நம்பகமான கடல் போக்குவரத்து சேவையை தொடர்ந்து வழங்குவதில் சிரமங்கள் காணப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தின் கீழ், புதிய பயணிகள் படகு C-NOR Foundation Limited நிறுவனத்தினால் தயாரிக்கப்படவுள்ளது. இதன் சேவையை சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள நெடுந்தீவு அபிவிருத்திச் சங்கம் முன்னெடுக்கவுள்ளது.
படகு சேவையின் மூலம் கிடைக்கும் வருமானம், நெடுந்தீவு பகுதியிலுள்ள குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அபிவிருத்திச் சங்கத்தின் உறுப்பினர்களும் உள்ளடங்குகின்றனர்.
இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு கடற்றொழில், நீர்வள மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.










