2027ஆம் ஆண்டில் மாணவர்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்படவுள்ள பாடப்புத்தகங்கள் மற்றும் பாடப்புத்தக தொகுதிகளை அச்சிடுவதற்காக 21 அச்சு நிறுவனங்களுக்கு 1,614.69 மில்லியன் ரூபா பெறுமதியான ஒப்பந்தங்களை வழங்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் முதல் கட்டத்தில் 421 வகையான பாடப்புத்தகங்கள் மற்றும் கற்றல் தொகுதிகள் அச்சிடப்படவுள்ளன. இதில் தரம் 1, தரம் 2 மற்றும் தரம் 6 மாணவர்களுக்குத் தேவையான தொகுதிகளும் உள்ளடங்குகின்றன.
இதற்கான அச்சு நிறுவனங்களைத் தெரிவு செய்வதற்காக கல்வி வெளியீட்டுத் திணைக்களம் தேசிய போட்டி கொள்முதல் நடைமுறையின் கீழ் கேள்விப்பத்திரங்களை கோரியிருந்தது. இதன்போது 31 நிறுவனங்கள் தங்களது கேள்விப்பத்திரங்களை சமர்ப்பித்திருந்தன.
அந்த கேள்விப்பத்திரங்களை மதிப்பீடு செய்ததன் பின்னர், உயர்மட்ட நிரந்தர கொள்முதல் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் 21 அச்சு நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தங்களின் மொத்த பெறுமதி 1.614 பில்லியனாகும். இதில் பெறுமதி சேர் வரி (VAT) உள்ளடக்கப்படவில்லை.
அச்சு ஒப்பந்தங்களை வழங்குவதற்கான முன்மொழிவை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்திருந்த நிலையில், அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.










