அரசியல் குழுக்களைப் பயன்படுத்தி உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளைக் குலைக்க முயற்சிப்பது யாருக்கும் நன்மையளிக்காது என்று சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பதற்கு விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வேண்டுமே தவிர, அவற்றைச் சீர்குலைக்க முற்படக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேராதனை போதனா மருத்துவமனையில் நேற்று (14) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் சரியான பாதையில் நகர்ந்து கொண்டிருக்கின்றன. வெளிவரும் சாட்சியங்களின் அடிப்படையில் சில நபர்கள் கைது செய்யப்படுகிறார்கள். மேலதிக விசாரணைகளுக்காக அவர்களுக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவுகள் பெறப்படுகின்றன.