மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா பகுதியில் இன்று சனிக்கிழமை மாலை கால்வாய் வழியாக வீதியைக் கடக்க முயன்ற நபர் ஒருவரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
நீண்ட நேர தேடுதலின் பின்னர் அவர் தீயணைப்புப் படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று மாலை 5.30 மணியளவில் நாவற்குடா பகுதியிலுள்ள பிரதான வடிகால் கால்வாய் ஒன்றினூடாக நபர் ஒருவர் உள் நுழைந்து, அதன் வழியே வீதியைக் கடக்க முயன்றுள்ளார்.
அவர் கால்வாய்க்குள் இறங்குவதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள், அவர் நீண்ட நேரமாகியும் மறுபுறம் வெளியே வராததால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அவர் கால்வாயினுள்ளே ஆபத்தில் சிக்கியிருக்கலாம் என அச்சமடைந்த பொதுமக்கள், உடனடியாக இது குறித்து காத்தான்குடி பொலிஸாருக்கும், மட்டக்களப்பு மாநகர சபை தீயணைப்புப் படைக்கும் தகவல் வழங்கினர்.
தகவல் கிடைத்த உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு மாநகர சபை தீயணைப்புப் படையினரும் காத்தான்குடி பொலிஸாரும் இணைந்து கூட்டு மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இச்சம்பவத்தைக் கேள்விப்பட்டு அப்பகுதியில் பெருமளவிலான பொதுமக்கள் திரண்டதால் தற்காலிகமாக பெரும் பதற்ற நிலை உருவானது.
சுமார் 2 மணித்தியாலங்களாக தீயணைப்புப் படையினர் மேற்கொண்ட தீவிர தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் பயனாக, கால்வாய்க்குள் சிக்கியிருந்த நபர் இரவு 7.00 மணியளவில் பத்திரமாக மீட்கப்பட்டார்.
மீட்கப்பட்ட நபர் ஆபத்துகளின்றி பாதுகாப்பாக அவரது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.