கொஸ்கம – பரணகம பொது மயானத்தில் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டிருந்த இரண்டு இளைஞர்களின் சடலங்கள் இருந்த குழியைத் தோண்டி, மாந்திரீகச் சடங்கு நடத்திய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விரிவான விசாரணைகளைக் கொஸ்கம பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
கடந்த மே மாதம் 16ஆம் திகதி கொஸ்கம – தாவல்கொட கால்வாயில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் உடல்களே கொஸ்கம – பரணகம பொது மயானத்தில் இவ்வாறு ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டிருந்தன.
அவ்வாறு புதைக்கப்பட்டிருந்த சடலங்களின் குழியை, கடந்த 14ஆம் திகதி அதிகாலை வேளையில் புகுந்த ஒரு கும்பல் தோண்டி, அங்கு மாந்திரீகத் சடங்குகளை மேற்கொண்டுள்ளது.
மயானத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளைப் பரிசோதித்த போது, மயானத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் சிறிய லொறி ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் பயணிப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
அந்த லொறி வண்டியைப் பின்தொடர்ந்து சென்ற பொலிஸார், அது கொஸ்கம வித்தியால மாவத்தையிலுள்ள ஒரு வீட்டிற்குச் சென்றுள்ளதைக் கண்டுபிடித்தனர்.
அவ்வீட்டின் உரிமையாளரிடம் நடத்திய விசாரணையின் போது, தனது மனைவியின் தீராத நோய் நிலைமை காரணமாக, மஹியங்கனைப் பகுதியிலிருந்து மாந்திரீகர்களை வரவழைத்து அந்த மயானக் குழியின் மீது தொவில் சடங்கு நடத்தியதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனையடுத்துக் கைது செய்யப்பட்ட வீட்டின் உரிமையாளர் நேற்று செவ்வாய்க்கிழமை அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
நீதிமன்ற உத்தரவின்படி, தோண்டப்பட்டிருந்த அந்த மயானக் குழியை மீண்டும் மூடிவிடுமாறு பொலிஸார் அறிவுறுத்தியிருந்தனர்.
எனினும், மாந்திரீகக் கும்பல் சவப்பெட்டிகளைத் திருடிச் சென்றிருக்கலாம் என உயிரிழந்த இளைஞர்களின் உறவினர்களுக்குப் பலத்த சந்தேகம் ஏற்பட்டதால் நேற்று மாலை மயானத்தில் பெரும் பதற்ற நிலை உருவானது.
அதனைத் தொடர்ந்து, கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் அந்தக் குழி மீண்டும் ஆழமாகத் தோண்டப்பட்டு, அதற்குள் சவப்பெட்டிகள் (Coofins) பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்த பின்னரே, சடலங்கள் மீண்டும் முறைப்படி மூடி அடக்கம் செய்யப்பட்டன.
இச்சம்பவம் குறித்து கொஸ்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், தலைமறைவாகியுள்ள பிரதான மாந்திரீகர் உள்ளிட்ட கும்பலைத் தேடி வருவதாகவும், அவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.