பிரேசிலின் புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, இலங்கைக்கும் பிரேசிலுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தனது தேர்தல் வெற்றியை முன்னிட்டு இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வெளியிட்ட வாழ்த்துச் செய்திக்குப் பதிலளிக்கும் வகையில், லூலா இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகமான ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் இந்தியாவில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்ததை நினைவுகூர்ந்த லூலா, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதற்கான வாய்ப்பை வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“எனது அன்புக்குரிய அநுர திசாநாயக்க அவர்களே, இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் இந்தியாவில் உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சியடைந்தேன்” என அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
தனது தேர்தல் வெற்றி குறித்துக் கருத்துத் தெரிவித்த லூலா, தவறான தகவல்கள் மற்றும் தீவிரவாதப் போக்குகளுக்கு எதிராக ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியும் என்பதை பிரேசில் மக்கள் நிரூபித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“தவறான தகவல்கள் மற்றும் தீவிரவாதத்துக்கு எதிராக ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியும் என்பதை பிரேசில் மக்கள் எடுத்துக்காட்டியுள்ளனர். இது ஒரு மகத்தான வெற்றியாகும். எமது நாடுகளுக்கு இடையிலான தொழில்நுட்ப ஒத்துழைப்பையும் இருதரப்பு வர்த்தகத்தையும் மேலும் வலுப்படுத்த முடியும் என நம்புகிறேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, லூலாவின் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்திருந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இந்த வெற்றியை ஊழல், பிளவு மற்றும் அரசியல் ரீதியான தவறான தகவல்களுக்கு எதிரான வெற்றியாக வர்ணித்திருந்தார்.
“இன்று பிரேசில் மக்கள் தேர்தலில் வெற்றி பெற்றது மட்டுமல்ல; ஊழல், பிளவு மற்றும் அரசியல் பொய்களைப் பரப்பும் சக்திகளையும் தோற்கடித்துள்ளனர்” என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது ‘எக்ஸ்’ பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், அரசியல் குடும்ப ஆதிக்கத்தாலும் கடந்தகால அரசியல் சக்திகளாலும் மக்களைத் தொடர்ந்து தவறாக வழிநடத்த முடியாது என்பதை லூலாவின் வெற்றி எடுத்துக்காட்டுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
“மீண்டும் முன்னேற்றத்துக்கான பயணத்தை வழிநடத்துவதற்காக வாழ்த்துகள், தோழரே!” என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.











