ஏர்பஸ் விமானக் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பில், பணமோசடி மற்றும் 100 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு எதிராகக் கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகமவுக்கு அறிவித்தார்.
பிரதம நீதியரசரின் அனுமதியுடன், நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் குறித்த குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகப் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
குறித்த குற்றப்பத்திரிகையில் 24 குற்றச்சாட்டுகளும் 59 சாட்சிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்படி, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் இறுதி சந்தர்ப்பமாக இன்றைய தினம் அமையும் என எதிர்பார்க்கப்படுவதாகப் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.
இந்நிலையில், குறித்த வழக்கு இன்று பிற்பகல் மீண்டும் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.










