சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை நாளை புதன்கிழமை கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
நாமல் ராஜபக்ஷ, நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படும் வரை விளக்கமறியலில் வைக்கப்பட வேண்டும் என்றும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், வழக்கு விசாரணை தொடர்பான அறிக்கையை ஒக்டோபர் 30ஆம் திகதி நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பணமோசடி மற்றும் 100 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் நாமல் ராஜபக்ஷ மற்றும் மேலும் மூவருக்கு எதிராக நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று முன்னதாக, பிரதம நீதியரசரின் அனுமதியுடன் குறித்த குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகப் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தார்.
குற்றப்பத்திரிகையில் 24 குற்றச்சாட்டுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், 59 சாட்சிகளின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், வழக்கு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளதால், கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் இறுதிச் சந்தர்ப்பமாக இன்றைய தினம் அமையும் எனவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டார்.










