சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் சந்தேகத்தின் பேரில், இலங்கையின் பல்வேறு கடற்பிராந்தியங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின்போது 55 பேரைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
ஒக்டோபர் 2ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின்போது, சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கடற்படை தெரிவித்துள்ளது. இதன்போது, 33 டிங்கி படகுகள், ஒரு தோணி மற்றும் அனுமதியற்ற மீன்பிடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
திருகோணமலை, யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் ஆகிய கடலோரப் பகுதிகளில் கிழக்கு, வடக்கு மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளைகளின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள், கைப்பற்றப்பட்ட படகுகள் மற்றும் அனுமதியற்ற மீன்பிடி உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, ஒக்டோபர் 13ஆம் திகதி தென்பகுதிக் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு நடவடிக்கையின்போது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, பல நாள் கடற்றொழிலில் ஈடுபடும் இழுவைப் படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட படகும் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் (PNB) ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.










