சமூக ஊடகங்கள் மற்றும் குறுஞ்செய்திப் பரிமாற்றச் செயலிகள் ஊடாகப் போலியான மற்றும் திருத்தப்பட்ட உத்தியோகபூர்வ சுற்றறிக்கைகள் பரப்பப்படுவது தொடர்பில் பொதுமக்களுக்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உத்தியோகபூர்வ சுற்றறிக்கைகள் திரிபுபடுத்தப்பட்டு, தவறான தகவல்கள் இணையவழியில் பரப்பப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை அவதானித்துள்ளதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இவ்வாறான தவறான தகவல்கள் ஆசிரியர்கள், அதிபர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என அமைச்சு கவலை தெரிவித்துள்ளது.
எனவே, அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்படும் சுற்றறிக்கைகளை மாத்திரமே சரியானதும் செல்லுபடியாகக் கூடியதுமான தகவல்களாகக் கருதுமாறு பொதுமக்கள் மற்றும் தொடர்புடைய தரப்பினரிடம் அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், போலியான அல்லது திருத்தப்பட்ட சுற்றறிக்கைகளால் ஏமாற வேண்டாம் எனவும், அவ்வாறான தகவல்களைச் சமூக ஊடகங்கள் மற்றும் குறுஞ்செய்திப் பரிமாற்றத் தளங்கள் ஊடாகப் பகிர்வதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.










