மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக உத்தியோகபூர்வ சீருடை அணிந்த எந்தவொரு பொலிஸ் அதிகாரியும் சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரம் கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் போக்குவரத்துப் பொலிஸ் பிரிவில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு மாத்திரம் வரையறுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
உத்தியோகபூர்வ சீருடை அணிந்த எந்தவொரு பொலிஸ் அதிகாரியும் தனியாகப் பணியில் ஈடுபட்டிருந்தாலும், போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் என அவர் விளக்கமளித்துள்ளார்.
போக்குவரத்துச் சட்டங்களை அமுல்படுத்துவதற்குப் பொலிஸ் அதிகாரிகளுக்கு உள்ள அதிகாரம் குறித்து சமூக ஊடகங்களில் எழுந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் இந்தத் தெளிவுபடுத்தலை வழங்கியுள்ளார்.
இதற்கிடையில், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோரைக் கைது செய்வதற்காகப் பொலிஸ் அதிகாரிகள் மறைந்திருந்து கண்காணிப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டறிவதற்காகப் பொலிஸ் அதிகாரிகள் தங்களை மறைத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என பொலிஸ் மா அதிபர் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.










